Saturday, 2 January 2021

ஸ்ரீ சத்ய சாயி ஸுப்ரபாதம்

 ஸ்ரீ சத்ய சாயி ஸுப்ரபாதம்

(பதவுரை மற்றும் விளக்கவுரை)

நன்றி - www.sssbalvikastn.org 



ஸுப்ரபாதம் வரிகள் (சீர் 1)

ஈஸ்வராம்பா ஸுத ஸ்ரீமன் பூர்வாஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட ஸத்ய ஸாயீஸ‚ கர்த்தவ்யம் தைவம் ஆஹ்னிகம்


பதவுரை:
ஈஸ்வராம்பாவின் திருப்புதல்வரே! ஸ்ரீமானே! ஸத்ய ஸாயிநாதனே! கிழக்குத் திசையில் வைகறைப் பொழுது ஆரம்பமாகிறது. ஸகல ஐஸ்வர்யங்களுக்கும் தலைவனே! பகற்பொழுதில் செய்யவேண்டிய தெய்வீகமான நித்ய கடமைகளை ஆற்றுவதற்குப் பள்ளி எழுந்தருளாய்.

விளக்கம்:
ஸுப்ரபாதம் பாடுவதால், தூங்கும் கடவுளை நாம் எழுப்பவில்லை. நம்முள் இருக்கும் தெய்வீகச் சக்தியை விழித்தெழச் செய்கிறோம். தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன் ஈஸ்வராம்பாளுக்குப் பிள்ளையாய், ஸத்ய ஸாயியாய்த் தோன்றியமையால் எம்பெருமானை ஈஸ்வராம்பாஸுத என்று விளித்தார் கவி. பரிபுரண அழகு. ஐஸ்வர்யம். புகழ் உடைய அவதார புருஷரை ஸ்ரீமான் என்று விளிப்பது பொருந்தும். விடிவௌ்ளியாய்த் தோன்றிய அண்ணலே! விடியற்காலையாயிற்று. இரவிக்கு ஒளிதரும் இறைவா! இரவு முடிந்து இரவி (ஸூர்யன்) எழுந்தான். புற இருள் கழிகின்றது. ஆனால் அகவிருள் கழிய, நீ அகம் மலர வேண்டும். என் அகம் மலர நீ மலர வேண்டும் எனும் பொருள் பொதிய கீழ்த்திசையிலுள்ள வௌ்ளென்ற வெளிச்சம் ஆரம்பித்து விட்டது என்கிறார் கவி. “எங்கும் உள்ள ஸத்யஸாயி நாதனே! எழுந்தருளாய்!” என்கிறார். பகலில் செய்ய வேண்டிய தெய்வீகமான நித்ய கடமைகள் செய்யப்பட வேண்டும் என ஸ்வாமிக்குச் சொல்கிறார் கவி. கைலாயத்திலிருந்தோ பாற்கடலிலிருந்தோ அகிலத்தில் அறத்தை நிலைநாட்டும் ஆற்றலுடைய நீவிர் அவனியிலுள்ள உயிர்களுக்குத் தா்ஸன, ஸ்பா்ஸன, ஸம்பாஷணைகளை நல்குவதற்காகவன்றோ அவதரித்தீர். இதை அறிந்தும் அறிதுயில் கொண்டால் அறியாமைத் துயிலிலுள்ள எங்களை யார் எழுப்புவது? எம்பெருமானே! என்ற உள்ளத்தின் உறுத்தல் பள்ளி எழுச்சிப் பாடலாய் மலர்ந்தது.


ஸுப்ரபாதம் வரிகள் (சீர் 2)

உத்திஷ்டோத்திஷ்ட பர்த்தீஸ உத்திஷ்ட ஜகதீபதே
உத்திஷ்ட கருணா பூர்ண‚ லோக மங்கள ஸித்தயே


பதவுரை:
புட்டபர்த்திநாதனே! உலகநாயகனே! கருணை நிறைந்தவரே! உலக மங்களத்தை உண்டாக்குவதன் பொருட்டு பள்ளி எழுந்தருள்வீராக

விளக்கம்:
உலக நாயகனுக்கு உலகைக் காப்பாற்றும் கடமையை உதறித்தள்ள முடியாது என்று பொருள் தோன்றுவது போலும் ஜகதீபதே என்றார். பள்ளியெழுந்தருள்வாய், பள்ளியெழுந்தருள்வாய் என நான்கு முறை பாடுதல் ஸத்யத்தைக் காக்க, தர்மத்தைக் காக்க, சாந்தியைக் காக்க பிரேமையைக் காக்க எழுந்தருள்வாய் என்பது போல் தோன்றா நிற்கிறது.

அண்ட நாயகனானாலும், அளவற்ற அன்பு கொண்டவன். ஆட்டிப்படைப்பவனாலும், உயிர்கள் பால் இரக்கம் கொண்டவன் என்ற உண்மைகளை உணர்த்த கருணாபூர்ண என்கிறார். கர்மத்தால் அவதிப்படும் உயிர்களைக் கண்டு கலங்கிக் கருணை கொண்டாலும், அனைவரின் அவதியையும் நீக்கும் ஆற்றல் எங்களுக்கில்லை. கருணையும், ஆற்றலும் பெற்ற நீ உலக மங்களத்தை உண்டாக்குவதன் பொருட்டு எம்பெருமானே! பள்ளி எழுந்தருள்வாய் என்கிறார் கவி.
--------
உத்திஷ்ட: பள்ளி எழுந்தருள்வீராக,

ஜகத்: உலகம், ஜகத்பதே- ஜகதீபதே: உலகநாயகனே,

கருணா: கருணை
கருணா பூர்ண: கருணை நிறைந்தவரே,

ஸித்தயே: உண்டாக்குவதன் பொருட்டு. 


ஸுப்ரபாதம் வரிகள் (சீர் 3)

சித்ராவதீ தட விஸால ஸு ஸாந்த ஸௌதே
திஷ்டந்தி ஸேவக ஜனாஸ்தவ தர்ஸனார்த்தம்
ஆதித்ய காந்திரனுபாதி ஸமஸ்த லோகான்
ஸ்ரீ ஸத்யஸாயி பகவன் தவ ஸுப்ரபாதம்.

பதவுரை:
சித்ராவதி நதிக்கரையில் அமைந்த அகன்ற அமைதியான மாளிகையில் உன்னுடைய தரிசனத்திற்காக ஸேவக ஜனங்கள் நிற்கிறார்கள். சூரிய ஒளி அனைத்து உலகங்களையும் ஒளிரச் செய்கிறது. ஸ்ரீ ஸத்யஸாயி பகவானே! உங்களுக்குக் காலை மங்களகரமானதாக இருக்கட்டும்.

விளக்கம்:
புட்டபர்த்திக்கு, ஸ்தல பெருமை, தீர்த்தப் பெருமை, மூர்த்தி பெருமை மூன்றும் உண்டு. பவக் கடலிலிருந்து உயிர்களைக் கரை ஏற்ற வந்த எம்பெருமான் திவ்ய மங்கள விக்ரகமாக சித்ராவதியின் கரையில் உறைகிறார். அழகு தவம் செய்து அவதார புருஷரைத் தன் கரையில் உள்ள ஊரில் அவதரித்து இருக்கச் செய்து தன் பெருமையைக் கூட்டிக் கொண்டது. அகன்ற, தெய்வீக அமைதி கொண்ட ப்ரஸாந்தி நிலையத்தில், எம்பெருமானே‚ உன் தரிசனத்தின் பொருட்டு ஸேவக ஜனங்கள் நிற்கிறார்கள். எல்லா உலகங்களையும் ஆதித்தனொளி ஒளிரச் செய்கிறது. ஆதித்தனை ஒளிரச் செய்பவன் நீ. அவனுக்குக் கர்ம யோகத்தைக் கற்பித்தவன் நீ. நிற்காமல் வேலை செய்யும் ஸேவக ஜனங்கள் நிற்கிறார்கள். தரிசனம் தந்தாலன்றோ கர்ம யோகிகளான அவர்கள் தம் அலுவல்களைத் தொடர முடியும். ஆகவே எழுந்தருள்வீராக.
-------
சித்ராவதீதட: சித்ராவதியின் கரையில்,
தட: கரை,

விஸால: அகன்ற,
ஸு: நல்ல,

ஸாந்த: அமைதியான,

ஸௌதம்: அரண்மனை,
மாளிகை,
ஸௌதே: மாளிகையில்,

திஷ்டந்தி: நிற்கிறார்கள்,

சேவகஜனா: ஸேவகஜனங்கள்,

தவ: உன்னுடைய,

தர்ஸனார்த்தம்: தரிசனத்தின் பொருட்டு,
அர்த்தம்: பொருட்டு,

ஆதித்ய: சூரியன்,

ஆதித்ய காந்தி: சூரிய ஓளி,

அனுபாதி: ஒளிரச் செய்கிறது,

ஸமஸ்த: எல்லா,

லோகான்: உலகங்களையும்,
ஸ்ரீ ஸத்ய ஸாயி பகவன் திருநாமம் (இங்கு விளி)
தவ: உன்னுடைய,

ஸு-நல்ல,

ப்ரபாதம்-காலை,

தவஸுப்ரபாதம்: உங்களுக்கு காலை மங்களகரமானதாக இருக்கட்டும்.



ஸுப்ரபாதம் வரிகள் (சீர் 4)

த்வன்னாம கீர்த்தன ரதாஸ்தவ திவ்யநாம
காயந்தி பக்தி ரஸபான ப்ரஹ்ருஷ்டசித்தா:
தாதும் க்ருபாஸஹித தர்ஸனம் ஆஸுதேப்ய:
ஸ்ரீ ஸத்யஸாயி பகவன் தவ ஸுப்ரபாதம்.

பதவுரை:
உன்னுடைய நாமஸங்கீர்த்தனம் செய்வதில் விருப்பமுள்ளவர்கள், பக்திரஸத்தைப் பருகியதால் மிகவும் மகிழ்ந்த உள்ளங்கள் உடையவர்களாய், உன்னுடைய தெய்வீகமான நாமங்களைப் பாடுகிறார்கள். அவர்களுக்கு கருணையுடன் கூடிய தரிசனம் அளிப்பதற்கு எழுந்தருள்வாய். உனக்கு காலைப்பொழுது மங்களகரமானதாயிருக்கட்டும்.

விளக்கம்:
பாரெங்கும் நிறைந்துள்ள பரமனே! உன் பக்தர்கள் பாடுகிறார்கள். எதைப் பாடுகிறார்கள்? ‘தவ திவ்ய நாம-தங்கள் தெய்வீகமான நாமங்களைப் பாடுகிறார்கள். பாடினால் என்ன? மனம் லயிக்காமல் பாடலாமே? பஜனைப் பாடலுக்கு ராகம், தாளம் என்ற புற இலக்கணங்களும், அர்த்தம், பாவம் (Bhavam) என்ற அக இலக்கணங்களும் உண்டு. ராகம், தாளம் இருந்தாலும் பக்தியின்றிப் பாடல் சோபிக்காது. ஆகையால் பாடுபவர்களின் சிறப்பை (பக்தி ரஸபான ப்ரஹ்ருஷ்டசித்தா:) பக்தி ரஸத்தைக் குடித்ததால் ஏற்படும் சந்தோஷமுள்ள உள்ள பாங்கினால் தெரிவித்தார். ஆக பக்தி பாவமுடையவர்களாய்ப் பாடுகிறார்கள் என்று கவி குறித்தார். பக்தி பாவம் (Bhava) இருக்கலாம். ஆனால் பாடும் போதெல்லாம் பக்தியோடு பாடுவார்களா? இதற்கு விடையாகப் பாடுபவர்களைப் பணம் கொடுத்துப் பாட வைக்கவில்லை. உன்னுடைய நாமஸங்கீர்த்தனம் செய்வதில் விருப்பமுடையவர்கள் எனும் கருத்தை ‘த்வன்னாம கீர்த்தன ரதா:” என பதம் குறித்தது. பாடுபவர்கள் பாடட்டுமே எனப் பரமன் பகர்ந்தால் என் செய்வது? க்ருபாஸஹித-கருணையுடன் கூடியவரே என விளித்தார். கருணை உடையவனே ! கனிந்து வரும் பக்தர்களை நீடித்துக் காக்க வைக்கலாமா? பாடும் பக்தர்கள் நாடும் தரிசனத்தை நல்குவாய். நீண்டகாலம் நிற்கிறார்கள். ஆகவே (ஆஸு) விரைவிலேயே தரிசனத்தைக் கொடுக்க எழுந்தருள்வீராக எம்பெருமானே! என்றார்.
-------

த்வந்: உன்னுடைய,

நாம: நாமங்களை,

கீர்த்தன: கீர்த்தனம் செய்வதில்,
ரதா: விருப்பள்ளவர்கள்,

தவ: உன்னுடைய,

திவ்ய: தெய்வீகமான,

நாம: நாமங்களை,

காயந்தி: பாடுகிறார்கள்,

ஆஸு: விரைவில்,

தேப்ய: அவர்களுக்கு,

பக்திரஸ: பக்திரஸத்தை,

பான: பருகியதால்,

பிரஹ்ருஷ்ட: மிகவும் சந்தோஷமுள்ள,

சித்தா: உள்ளங்கள் உடையவர்களாய்,

தாதும்: கொடுத்துப்பதற்கு,

க்ருபா: க்ருபையுடன் கூடியவரே,

தர்ஸனம்: தாரிசனத்தை.


ஸுப்ரபாதம் வரிகள் (சீர் 5)

ஆதாய திவ்ய குஸுமானி மனோஹராணி
ஸ்ரீபாதபூஜன விதிம் பவதங்க்ரி மூலே
கர்தும் மஹோத்ஸுகதயா ப்ரவிஸந்தி பக்தா:
ஸ்ரீ ஸத்யஸாயி பகவன் தவ ஸுப்ரபாதம்.

பதவுரை:
தெய்வீகமான மனத்தை ஈர்க்கக் கூடிய நறுமணமுள்ள மலர்களை எடுத்துக்கொண்டு தங்களுடைய திருவடிகளைப் பூஜிக்கும் சடங்குகளைச் செய்வதற்கு மிகுந்த உற்சாகத்துடன் பக்தர்கள் புகுகிறார்கள். உங்களுக்கு காலைப்பொழுது மங்களகரமானதாயிருக்கட்டும்.

விளக்கம்:
வைகறையில் எம்பெருமானின் பாதங்களைப் பூஜை செய்யப் பக்தர்கள் பிரஸாந்தி நிலையத்திற்குள் புகுகின்றனர்.

ஸர்வத: பாணிபாதம்:- பகவானின் பாதங்கள் எங்கும் இருக்கின்றன. ஆனால் ஸாக்ஷாத் பகவான் ஸத்யஸாயியின் திருவடிகளுக்குக் கீழே பாதபூஜை செய்ய விழைகின்றனர். அது மட்டுமல்ல, மிகவும் உற்சாகத்துடன் பாத பூஜை செய்ய விழைகின்றனர். பாவங்களைப் போக்குவது பரமனடி. ஒரு பசுவின் அவயங்கள் பலவானாலும் பாலை மடியிலிருந்து பெறுவது போல் பக்தர்கள் தம் பேறுகளை இறைவனடியிலிருந்து பெறுகின்றனர். பகவானை நோக்கிப் பக்தன் ஓரடி எடுத்து வைத்தால் பக்தனை நோக்கிப் பத்தடி எடுத்து வைப்பான் பகவான். நம் கர்மத்தால் விழும் அடிகளைத் தம் தர்மத்தால் காப்பன பகவானின் பாத மலரடிகள்.
---
ஆதாய: எடுத்துக்கொண்டு,

திவ்ய: தெய்வீகமான,

குஸுமானி: நறுமணம் மிக்க மலர்கள்,

மனோஹராணி: மனதை ஈர்க்கக்கூடிய:

ஸ்ரீபாத: திருவடிகளை,

பூஜன: பூஜிப்பதற்குரிய,

விதிம்: சடங்கை, பவத்: தங்களுடைய,

அங்க்ரி: அடிகளின்,

மூலே: கீழே,

கர்தும்: செய்வதற்கு,

மஹா: பெரிய,

உத்ஸூகதா: உற்சாகம்,

மஹோத்ஸுகதயா: மிக்க உற்சாகத்துடன்,

ப்ரவிஸந்தி: புகுகிறார்கள்,

பக்தா: பக்தர்கள்



ஸுப்ரபாதம் வரிகள் (சீர் 6)

தேஸாந்தராகத புதாஸ்தவ திவ்ய மூர்திம்
ஸந்தர்ஸனாபிரதி ஸம்யுத சித்தவ்ருத்யா
வேதோக்த மந்த்ர படனேன லஸந்த்யஜஸ்ரம்
ஸ்ரீ ஸத்யஸாயி பகவன் தவஸுப்ரபாதம்

பதவுரை:
உலகின் பல பாகங்களிலிருந்து வந்த அறிஞர்கள் உங்களுடைய தெய்வீகமான திருவுருவத்தை நன்கு தரிசிப்பதில் மிக்க விருப்பமுடன் கூடிய உள்ளபாங்கு உடையவர்களாய் வேதங்களில் சொல்லப்பட்ட மந்திரங்களை உச்சரிப்பதில் எப்பொழுதும் ஈடுபட்டிருக்கிறார்கள். உங்களுக்குக் காலைப் பொழுது மங்களகரமானதாக இருக்கட்டும்.

விளக்கம்:
மூன்றாம் பாடலில், நிற்காமல் சேவை செய்வோர், பகவானின் தரிசனம் பெற நிற்கின்றனர் என்றார். நாலாவது பாடலில் பூமலர்கள் வாடிவிடும் எனப் பாமலர்களால் பக்தியுடன் ஏத்தும் பக்தர்கள் இருக்கின்றனர் என்றார். ஐந்தாவது பாடலில் மலரடிகளை மனங்கவரும் மணமிக்க மலர்களால் மனமுவந்து வழிப்படக் காத்திருக்கும் மாந்தர்கள் நிற்கின்றனர் என்றார். ஆறாவது பாடலில் முறையிடுகிறார். ‘ஸ்வாமி! வெளி தேசங்களிலிருந்து வந்திருக்கிறார்கள். வந்தவர்கள் அறிவுடையவர்கள் ஸ்வாமி! அது மட்டுமல்ல. அறிவின் மூலமும் பயனுமான தங்கள் திவ்ய திருஉருவத்தைத் தரிசிக்கும் பொருட்டு பெரும் விருப்பம் கூடியவர்களாய் உள்ளனர். இஃதன்றி, இடைவிடாது வேத மந்திரங்களை ஓதிக் கொண்டிருக்கின்றனர். ஆண்டவனைத் தரிசிக்கும் ஆர்வமும், ஆர்வத்தைச் செயல்படுத்தும் பாங்கான முறையில் மறையோதுகின்ற மாண்பும் இருப்பதால், தாங்கள் தரிசனம் தந்தருள வேண்டும்” என்றவாறு .
----
தேஸாந்தர: வெளிதேசங்களிலிருந்து(அல்லது) தேசத்தின் பலபாகங்களிலிருந்து,

ஆகத: வந்த,

புதா: அறிஞர்கள்,

தவ: உன்னுடைய:

திவ்ய: தெய்வீகமான,

மூர்த்திம்: திருவுருவத்தை,

ஸம்: நன்கு,

தர்ஸன: தரிசிப்பதில்,

அபிரதி: மிக்க விருப்பம்,

ஸம்யுத: உடன் கூடிய,

சித்தவ்ருத்யா: உள்ளப்பாங்கு உடையவர்களா ய,

வேத: வேதங்களில்,

உக்த: சொல்லப்பட்ட,

மந்த்ர: மந்திரங்களை,

படனேன: படிப்பதில்,

லஸந்தி: ஈடுபட்டிருக்கிறார்கள்,

அஜஸ்ரம்: எப்பொழுதும். 



ஸுப்ரபாதம் வரிகள் (சீர் 7)

ஸ்ருத்வாதவாத்புத சரித்ரமகண்ட கீர்த்திம்
வ்யாப்தாம் திகந்தர விஸால தராத லேஸ்மின்
ஜிக்ஞாஸு லோக உபதிஷ்டதி சாஸ்ரமேஸ்மின்
ஸ்ரீ ஸத்யஸாயி பகவன் தவஸுப்ரபாதம்.

பதவுரை:
இந்தப் பரந்த உலகின் எல்லாதிசைகளிலும் பரவியுள்ள தங்களுடைய அற்புதமான வாழ்வையும் அளவற்ற புகழையும் கேட்டு இந்த ஆஸ்ரமத்தில் (பிரஸாந்தி நிலையத்தில்) ஞான நாட்டம் கொண்ட மக்கள் நெருங்கி நிற்கிறார்கள். உங்களுக்குக் காலைப்பொழுது மங்களகரமானதாக இருக்கட்டும்.

விளக்கவுரை :
பகவான் பாபாவின் வாழ்க்கை முழுவதும் அற்புதம் நிறைந்தது. இறை உண்மை, உலக உண்மை, இவற்றைத் தெரிந்து ஆன்மீக வாழ்க்கையை தேடுவோர் உலகின் எல்லா பாகங்களிலிருந்தும் இருந்து வந்து பகவானின் தெய்வீகக் காட்சியைப் பெறுகிறார்கள்.

தெய்வீகம், ஒருவரை ஏன் இழுக்கிறது? பகவானின் புண்ணிய சரிதமும் தம் பக்தர்கள் பெற்ற நேரடி அனுபவமும், ஸாதனையில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளச் செய்கின்றன என்பதை இந்த வரிகள் நினைவுபடுத்துகின்றன.

“என் உயிருக்கு விடியலாக இருந்து ‘ உண்மை ‘ என்ற அழியா ஒளியை வீசி எனது உள்ளுணர்வைப் பெருக்கி உமது புகழை என் நினைவில் நிறுத்தி எந்நாளும் எனக்கு ஊக்கம் அளித்து என்னை உமது உடைமையாக ஆக்கிக் கொள்ளும்.”

நம்மை நாம் மாற்றிக் கொள்ளவும், திருத்தி அமைத்துக் கொள்ளவும் புதுமைப் படுத்திக் கொள்ளவும் இந்த தெய்வீகம் நம்மை இழுக்கிறது. இந்த அவதாரத்தின் காட்சியில் ஒவ்வொரு நாளும் மக்கள் ஆறுதல் பெறுகிறார்கள். நம் புத்தியில் தெளிவு ஏற்படுகிறது. அவரின் புகழ் மிகு லீலைகளைக் கேட்பதால், நம்முடைய எண்ணங்கள் உயர்கின்றன. நற்காரியங்கள் செய்யவும். அனைவரையும் நேசிக்கவும் நமக்கு ஊக்கம் அளிப்பதால் மேலும் மேலும் நாம் கேட்க விரும்புகிறோம். பின்பு நாம் அவரின் கருவியாக மாறி அவரின் விருப்பப்படி பணி செய்கிறோம். அவரது அருள் பெறக் காத்திருக்கிறோம். நாம் தவம் செய்ய முற்படுவதால் நம் வாழ்க்கை தெளிவாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆகிறது. தெய்வீக ஒளி பெறுகிறவரை நாம் தியானத்தில் ஈடுபட்டு நம் மனம் உறுதிப்படுகிறது.

நாம் புட்டபர்த்தி சென்று பார்த்தால், எல்லா தேசத்திலிருந்தும் வந்த அயல் நாட்டவரைக் காணலாம். அவர்களில் முஸ்லீம், கிருஸ்துவர், புத்த மதத்தினர், சௌராஷ்டிர மதத்தினர் ஆகி யோரையும் காணலாம். இவர்கள் அனைவரும் ஸாயி லீலைகளைக் கேள்விப் பட்டவர்கள். மற்றும் ஸாயியின் அருளாசியையும், புத்துணர்வையும், ஸ்பரிஸத்தையும் பெற்றவர்கள். குரு வின் அருளால் தம்மை மாற்றமடையச் செய்கிற ஆன்மீக சக்தி உள்ள ‘ பாரதத்திற்கு ‘ அவர்கள் வருகிறார்கள். இனம் – சாதி – என்ற வேறுபாடுகள் இல்லாமல் உண்மையைத் தேடுகிறவருக்குக் குரு வழிகாட்டியாக இருந்து யாவரையும் ஈர்க்கிறார்.

இந்த வரிகள் ஆனந்தமய கோசமான ‘ உயிர் அனுபவிக்கின்ற நல்லின்பத்தை காட்டு கிறது. நம் மனத்துக்கு அருள் கிடைக்கின்றது. நம் பகவானின் நற்கதைகளைக் கேட்பதில் நமக்கு பெரு விருப்பம் உண்டு. நம் உணர்வுகள் மேலோங்கி நல்மனிதராகிறோம். நமது இறைவன் (ஸ்வாமி) ஒவ்வொருவரின் உள்ளத்திலும் உறைவதாக உணர்கிறோம்.
----

ஸ்ருத்வா: கேட்டுவிட்டு,

தவ: உன்னுடைய,

அத்புத: அற்புதமான,

சரித்ரம்: வாழ்வை (நடத்தைகள்),

அகண்ட: இடையீடற்ற - எல்லையற்ற,

கீர்த்திம்: புகழை,

வ்யாப்தாம்: பரவியுள்ள,

திகந்தர: பல திக்குகளிலிருந்து,

அந்தர: நடுவில் - இடையில்'

விஸால: அகன்ற - பரந்த,

தராதலே: பூலோகத்தில்,
தரா தரை-
தலம்: இடம்,

அஸ்மின்: இந்த,

ஜிக்ஞாசு: ஞான நாட்டம் கொண்ட,

லோக: மக்கள்,

திஷ்டதி: நிற்கிறார்கள்,

உப: பக்கத்தில்,
உபதிஷ்டதி: பக்கத்தில் நெருங்கி நிற்கிறார்கள்,

ஆஸ்ரமே: ஆஸ்ரமத்தில்,

அஸ்மின்: இந்த. 


ஸுப்ரபாதம் வரிகள் (சீர் 8 )

ஸீதாஸதீ ஸம விஸுத்த ஹ்ருதம்புஜாதா :
பஹ்வங்கனா: கரக்ருஹீத ஸுபுஷ்பஹாரா:
ஸதுன்வந்தி திவ்ய நுதிபி:: பணி பூஷணம் த்வாம்
ஸ்ரீ ஸத்யஸாயி பகவன் தவஸுப்ரபாதம்

பதவுரை:
ஸீதாபிராட்டியார் எனும் பதிவிரதைக்கு இணையான தூய்மையுடைய இதயமெனும் தாமரை உடையவர்களான பல பெண்டிர், கையில் மேன்மையான மலர்மாலைகளை எடுத்துக் கொண்டு பாம்பாபரணமுடைய உங்களை தெய்வீகமான ஸ்துதிகளால் துதிக்கிறார்கள். உங்களுக்குக் காலைப்பொழுது மங்களகரமானதாக இருக்கட்டும்.

விளக்கம்:
‘எல்லையில் உலகங்கள் என் சொல்லினாற் சுடுவேன், அது தூயவன் வில்லிற்கு மாசென்று வீசினேன்” என்னும் பேருணர்வு கொண்ட எம்பெருமாட்டியார், இல் பிறப்பு என்பதொன்றும், இரும்பொறை என்பதொன்றும் கற்பென்னும் பெயரதொன்றும் களிநடம் புரியக்கண்டேன்” எனச் சொல்லின் செல்வனான ஆஞ்சனேயனால் புகழப்பட்ட ஸீதா பிராட்டியார், ‘புணரி எழுகின்ற தௌ்ளமுதோடு எழுந்தவளும் இழிந்தொதுங்கத் தொழுகின்ற நன்னலத்துப் பெண்ணரசி” எனக் கம்பர் போற்றும் ஸீதா பிராட்டியார் எனும் பதிவிரதைக்கு இணையான உள்ளத் தூய்மையுடையவர்களாய், கையில் எடுத்துக் கொண்ட நல்ல மலர் மாலையுடையவர்களாய், பெண்கள் நாகாபரணமுடைய உன்னை திவ்ய ஸ்தோத்ரங்களால் துதிக்கின்றனர். கற்புடைய பெண்டிர், கடவுளைப் பிணைக்கும் ஆற்றல் பெற்றுள்ளனர். அவர்கள் பெய்யெனப் பெய்யும் மழையெனில், அவர்களும் காத்திருக்கும் வண்ணம் நீயிருப்பது அறமோ? அறம் காக்க வந்த அண்ணலே‚ என்கிறார். (உள்ளமெனும் நளினமலர்கள், கையில் தூய மலர்கள், நாவில் பாமலர்கள் எனும் மும்மலர்களால் மூல முதல்வனையேத்த நிற்கும் பெண்டிரின் பெருமையைப் பேசுகிறது இப்பாடல்).
----

ஸீதா : ஸீதா பிராட்டியார்,

ஸதீ: பதிவிரதை,

ஸம: இணையான,

ஸுத்த: தூய்மையான,

விஸுத்த: மிகவும் தூய்மையான,

ஹ்ருத் : இதயம்,

அம்புஜாதா: தாமரை உடையவர்கள்,

பஹு: பல,

அங்கனா: பெண்கள்,

கர: கையில்,

க்ருஹீத: எடுத்துக்கொண்டு,

ஸு: நல்ல,

புஷ்ப: மலர்,

புஷ்பஹாரா: புஷ்ப மாலையுடையவர்களாய்,

ஸ்துன்வந்தி: துதிக்கிறார்கள்,

திவ்ய: தெய்வீகமான,

நுதிபி: ஸ்துதிகளால்,

பணி: பாம்பு,

பூஷணம்: ஆபரணம்,

பணிபூஷணம்: பாம்பாபரணமுடைய,

த்வாம்: உன்னை. 


ஸுப்ரபாதம் வரிகள் (சீர் 9)

ஸுப்ரபாதமிதம் புண்யம் யே படந்தி தினே தினே
தே விஸந்தி பரந்தாம ஞான விக்ஞான ஸோபிதா:

பதவுரை:
யாரொருவர் இந்தப் புண்யகரமான ஸுப்ரபாதத்தை அனுதினம் படிக்கிறார்களோ, அவர்கள் ஞானத்தாலும் அறிவினாலும் ஸோபிக்கப்பட்டு விளங்குவதுடன் பரமபதத்தையும் அடைகிறார்கள்.

விளக்கம்:
நாள்தோறும் நாவால் ஸுப்ரபாதத்தை பாடுபவர்கள், பரமபதத்தை அடைகிறார்கள். இறந்தபின் வைகுந்தம் சரி, உயிரோடிருக்கும் போது அவர்களுக்கு என்ன பயன் என்று கேட்பவர்களுக்கு விடையாக, இவ்வுலகில் ஞான விஞ்ஞானங்களோடு ஸோபித்து விளங்குவார்கள் என்றார் பாட்டின் பயன் கூறவந்த கவி. ஞானம் பெற்றவன் நானிலத்தில் நானாவிதப் பொருள்களையும் பெறுவான். நல்வழியில் நடந்து நன்மையைப் பயந்து வாழ்வான் என்பது திண்ணம் என்ற பொருள் ஒன்பதாம் பாடலில் பொதிந்து நிற்கிறது.
----
ஸுப்ரபாதம்: ஸுப்ரபாதத்தை,

இதம் : இந்த,

புண்யம்: புண்யகரமான,

யே: யாரொருவர்,

படந்தி: படிக்கிறார்களோ,

தினே தினே: தினமும்- அனுதினமும்,

தே: அவர்கள்,

விஸந்தி: புகுகிறார்கள்,

பரம்: உயர்ந்த,

தாம: பீடம்,

பரம்தாம : மிக உயர்ந்த பீடம் (இங்கு பரமபதத்தைக் குறிக்கிறது),

ஞான: ஞானம்,

விஞ்ஞானம்: விஞ்ஞானங்களோடு,

ஸோபிதா: ஸோபிக்கப்பட்டு (அழகுற) விளங்குகிறார்கள். 

படத்தில்:
பகவானுடன் - சுப்ரபாதம் இயற்றிய திரு. திருமலாசாரியார்! 




ஸ்ரீ சத்ய சாயி ஸுப்ரபாதம் (சீர் 10)

மங்களம் குருதேவாய மங்களம் ஞானதாயினே
மங்களம் பர்த்திவாஸாய மங்களம் ஸத்யஸாயினே

பதவுரை:
அஞ்ஞானத்தை போக்கும் குருதேவருக்கு மங்களமுண்டாகட்டும். புட்டபர்த்தியில் வசிப்பவருக்கு மங்களம் உண்டாகட்டும். ஞானத்தை நல்குபவருக்கு மங்களமுண்டாகட்டும். ஸத்ய ஸாயிநாதனுக்கு மங்களமுண்டாகட்டும்.

விளக்கம்:
மஹேஸ்வரனுக்கு மங்களம் கூறுவதால் மன்னுயிர்கள் மங்களத்தை அடைகின்றன. கடவுளுக்குக் காலைப்பொழுது மங்களமானதாக இருக்கட்டும் என்று மொழிந்து நம் காலைப்பொழுதை சுபமானதாக ஆக்கிக் கொள்கிறோம். பரமனுக்குப் பல்லாண்டு கூறுவதால், நாம் பல்லாண்டு வாழ்கிறோம். வரதன் வாழ்க, வாழ்க என்று கூறுவதால் வருந்தி வாழும் உயிர்கள் வருத்தம் நீங்கி வாழ்கின்றன. குருதேவர் துன்பம் தரும் பிறவியை ஒழித்து இன்பமூட்டும் பதவிகளை அளித்துக் காப்பாற்றுகிறார். அனைத்துத் துன்பங்களுக்கும் காரணம் அறியாமை. அறியாமையை அழிப்பதால் அனைத்துத் துயரங்களும் அழிகின்றன. ஆனந்தம் பெருகுகிறது.
----
குரு: அஞ்ஞானத்தைப் போக்குபவர், அறியாமையைப் போக்குபவர்,

குரு-குணங்களைக் கடந்து ரூபமற்ற நிலையில் இருப்பவர்.

கு-குணாதீதன், ரு-ரூபவர்ஜிதன்,

திவ்: ஒளிர்தல்,

தேவ: ஒளியுடையவன்,

குருதேவாய: குருதேவருக்கு,

தா: கொடுத்தல்,

தாயினே: கொடுப்பவருக்கு,

பர்த்திவாஸாய: புட்டபர்த்தியில் வசிப்பவருக்கு,

வாஸி: வசிப்பவருக்கு,

ஸத்ய ஸாயினே: ஸத்யஸாயிக்கு,

மங்களம்: மங்களம் உண்டாகட்டும்!
--------

நிறைவுற்றது.

--------
Source: www.sssbalvikastn.org
-------


---------------------------------

ஸ்ரீ சத்ய சாயி சுப்ரபாத காணொளிகள்: 

Sri Sathya Sai Official - https://youtu.be/GxotkcF8SU8 

Sundaram Sai Bhajan Official - https://youtu.be/xVNw_aT_m-Q 

Sai Darshan Official - https://youtu.be/PFx83sFM0q0

No comments:

Post a Comment