வாகனத்தை பராமரித்தல்
ஐந்து வித நீராடல்
அசுத்தத் தன்மை பொது ஜனப்பழக்கமாகவே மாறிவிட்டது
குணசீலம் சிறப்பாக இருந்தால், உடல் ஒளி வீசும்
- ஸ்ரீ சத்ய சாயி பாபா, பிரசாந்தி நிலையம், 16.10.1974
தவறான உணவுப் பழக்கங்களாலும், மூடத்தனமான வழிகளில் ஓய்வு நேரத்தை செலவழிப்பதாலும் நோய்கள் வருவதாக மருத்துவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். உணவு என்பது, பலவகைகளில் உள்ளே செல்வது அனைத்தையும் குறிக்கும் சொல் என்பதை அவர்கள் அறிந்ததாகத் தெரியவில்லை. எந்த புலன்கள் மூலம் அனுபவிக்கும் எந்த அனுபவமும், உணவு எனப்படும். அது மனிதனின் உடல் நலத்தைப் பாத்திக்கவல்லது. ‘சிந்தனை உணவு’ (food for thought) என நாம் கூறுகிறோம்; நாம் என்ன பார்த்தாலும், கேட்டாலும், நுகர்ந்தாலும், தொட்டாலும் அது உடலுக்கு நல்லதாகவோ, கெட்டதாகவோ பாதிப்பை ஏற்படுத்துகிறது. இரத்தத்தைக் கண்டதும் சிலருக்கு மயக்கம் வருகிறது. கெட்ட செய்தி அதிர்ச்சியை உருவாக்குகிறது. விருப்பமில்லாததை நுகர்ந்தாலோ, வேண்டாததை தொட்டாலோ, சுவைத்தாலோ அலர்ஜி உண்டாகிறது. ஆரோகியமான மனமே ஆரோக்கியமான உடலை தரும்; ஆரோக்கியமான உடல் ஆரோக்கியமான மனதை கொடுக்கும். இரண்டும் ஒன்றுக்கொன்று பரஸ்பரத் தொடர்பு கொண்டது. மகிழ்சிக்கு உடல் நலம் அவசியம்; மகிழ்சியோ, எது நிகழ்ந்தாலும், மகிழ்ச்சியுடன் இருக்கும் வல்லமையோ உடல் நலத்துக்கு மிக அவசியம்.
நாம் உண்ணும் உணவு சுவை உள்ளதாக, போஷிப்பதாக, இனிமையுள்ளதாக இருக்க வேண்டும். அது மிகக்காரமாக, மிக உப்புக்கரிப்பதாக இருக்கக் கூடாது. அது சமச்சீரான நிதானத்துடன் இருக்க வேண்டும். அது உணர்வுகளைத் தூண்டவும் கூடாது. மலுங்கச் செய்யவும் கூடாது. ராஜஸிக உணவு உணர்ச்சிகளைத் தூண்டி தீவிரமாக்குகிறது. தாமஸிக உணவு, சோம்பலையும், தூக்கத்தையும் வரவழைக்கிறது. சாத்விக உணவு திருப்தி செய்வதுடன், ஆசைகளைத் தூண்டுவதில்லை, உணர்ச்சிகளைத் தீவிரமாக்குவதில்லை.
இயற்கை தனது அமைப்பில் பல்வேறு மர்மங்களைக் கொண்டுள்ளது. தனது ஐம்புலன்களால் கண்டுக்கொள்ளக் கூடியவற்றின் சிக்கல்களை மட்டுமே மனிதனால் அவிழ்க்க இயலும். தன்னிடம் உள்ள குறைபாடுள்ள ஐம்புலன்களின் எல்லைக்கப்பால் பரந்து விரிந்த மாபெரும் சாம்ராஜ்யம் உள்ளது என்பதை அவன் அறிந்துணரவில்லை. உதாரணமாக ஒவ்வொரு உயிரிலிருந்தும் பொருளிலிருந்தும் லட்சக்கணக்கான நுண்துகள்களும், லட்சக்கணக்கான அதிர்வுகளும் இடைவெளியில்லாமல் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கற்பூரம் போன்ற பொருட்கள் மிக அதிகமான அளவில் இவற்றை வெளியிடுவதால், ஒரு கட்டி சில நாட்களில் கரைகிறது. பிறரது உடல்கள் இந்த வெளியிடுதல்கள் மூலமாக நம்மை பாதிக்கின்றன. நாமும் அதே விதமாக பிறரை பாதிக்கிறோம். நல்லதற்கோ கெட்டதற்கோ பரஸ்பரம் தவிர்க்க இயலாது பாதித்துக்கொண்டே இருக்கிறோம். இவ்விதத் தொடர்பினாலும் நாம் வளர்த்துக் கொள்கின்ற சகவாசத்தினாலும் நாம் உடல் வளர்ச்சியும், அத்துடன் கூட ஆரோக்கியமும் வலிமையும் பாதிக்கப்படுவது இயற்கையே. அழுக்கு சேரும் போதோ, கழிவுப்பொருள் சேர்ந்து கொள்ளும் போதோ, சாக்கடைகள் அடைத்துக்கொள்ளும் போதோ, இந்த வெளிப்படுதல்கள் (emanations) தீவிரமாகின்றன. இத்தகைய பகுதிகளில் இருந்து வியாதிகள் பரவுவதைத்தடுக்க, சுகாதார விதிகள் உருவாக்கப்படுகின்றன.
இத்தகைய பிறரின் வெளிப்படுதல்களிலிருந்து நமது உடலின் தடுப்புசக்தியை காத்துப்பராமரிப்பதற்காக, நமது மறை நூல்களில் ஐந்து விதமான குளியல்களை பரிந்துரைகிறது. முதலாவதாக ‘மண் குளியல்’, நுட்பமான மண்துகள் உடல் முழுவதும் பூசப்பட்டு, சிறிது நேரம் அவ்வாறே உடலில் வைத்திருந்து பிறகு அந்த மண் துகள் நீரால் கழுவப்படுகிறது. இரண்டாவது ‘சூரியக் குளியல்’ (Sun Bath), சூரிய கிரணங்கள் வலுவான கிருமி நாசினிகள் என்பதால், இந்தக் குளியல் பரிந்துரைக்கப்படுகிறது. இந்தக் குளியல் உடலுக்கு உரமூட்டுவதுடன் புத்துணர்வும் தருகிறது. மூன்றாவது ‘தண்ணீர்க் குளியல்’, ஓடும் நதி புனிதமாகக் கருதப்படுகிறது. மந்திரங்கள் கூறி நீராடும் போது, அகம் புறம் இரண்டுமே தூய்மையடைகின்றன. நாங்காவது ‘காற்றுக் குளியல்’ (Air Bath), உடல் முழுவதும் குளிர்ந்த காற்று படுகிறது. அதன் மூலம் உடல் புத்துணர்வு பெறுகிறது. ஐந்தாவது குளியல், ‘விபூதிக் குளியல்’, சிவனை நினைந்து உடல் முழுவதும் விபூதி பூசப்படுகிறது. பிறரிடமிருந்து வரும் அதிர்வுகளின் தீய பாதிப்பையும், தீய தொடர்புகளால் வரும் தீய பாதிப்பையும் உடல் பெறாதவாறு காக்கிறது. விபூதி அணிந்து மனிதனின் அதிர்வுகளையும் தூய்மைப்படுத்தி புனிதப்படுத்துகிறது. தானேயாகிய இறைவனைத் தவிர, தான் என்று கருதிய பிற அனைத்தும் அழிவது உறுதி என்பதை அவனுக்கு நினைவூட்டுகிறது.
தீண்டாமை என்ற சமூகப்பழக்கத்துக்கு இந்த உண்மையை அறிந்து உணர்ந்ததே, பிறப்பிடமாக இருந்திருக்க வேண்டும். தம்மைத் தாழ்ச்சியுறச் செய்கின்ற, அசுத்தப்படுத்துகின்ற மனிதருடனோ, பொருட்களுடனோ தொடர்பினைத் தவிர்ப்பது போன்ற பழக்கங்கள் நாளடைவில் அர்த்தமற்ற வாழ்வை மறுதலிக்கின்ற, பின்னிழுக்கும் சடங்குகளாக மாறிவிட்டன. இத்தகைய கட்டுப்பாடுகளையும், விலக்குகளையும் அனுசரிப்பதால் ஏளனத்துக்குள்ளாக்கும் மக்களுக்கு இவற்றின் உட்பொருட்சிறப்பை விளக்கிக் கூறுவது கடினமாக உள்ளது. தனது குறிக்கோளை அடைவதற்கு நீண்ட ஆயுளும் உடல் வலிமையும் பெற வேண்டுமென்று சாதகன் இத்தகைய பழக்க வழக்கங்களை மேற்கொள்கின்றான். “யுக்தா ஹாரா விஹாரஸ்ய”, கட்டுப்படுத்தப்பட்டு சீரமைக்கப்பட்ட உணவுப் பழக்கங்களும் ஓய்வுப்பழக்கங்களும் என்பது பற்றி கீதை கூறுகிறது. உணவின் தூலப்பகுதி மலமாக வெளியே தள்ளப்படுகிறது. அதன் சூக்க்ஷும பகுதி தசை, இரத்தம் இன்னும் பிறவாக மாற்றப்படுகிறது. அதிசூக்க்ஷும பகுதி மனதாகவும் அதன் செயற்பாடுகளாகவும் மாற்றப்படுகிறது. அதனால்தான் ஆன்மிக உந்துதல்களைத் தடுக்கவும் உணவுக்கு சில வரையறைகளும், சில படித்தரங்களும் வகுத்தனர்.
ஆனால் இக்காலத்தில், அதர்மம் நிறைந்த கலியின் பிரபாவத்தால், ஆன்மிக உந்துதலைப் பாழடிக்கும் உணவு அதிகமான அளவில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. புதுமை, புதிய ஆன்மிகம் என்ற பெயரில் தனிமனிதனின் சுத்தத்தின் அடிப்படை விதிகள் புறக்கணிக்கப்படுகின்றன. குளியலைப் பற்றி கவனிப்பதே இல்லை. பற்களைப் பராமரிப்பது இல்லை. கெடுதல் தரும் பழக்கங்கள் மலிந்து, சகித்துக்கொள்ளப்படுகின்றன. உடல் எனும் மாளிகைக்கு வாய்தான் நுழைவுவாயில். உள்ளே வசிப்போரைப் பற்றியும் கூற என்ன இருக்கிறது? அசுத்தத் தன்மை பொதுஜனப் பழக்கமாகிவிட்டது. அதனை ஆராதிப்பவரிடமிருந்து விலகி நிற்பதே நல்லது. ஏனெனில் சுத்தம், கடவுளுக்கு அடுத்த நிலையில் உள்ளது. தலைமுடி சீவாமல், முடிகலைந்து அழுக்கான தலைகளும் உடல்களும், கலைந்து, சீரில்லாத புத்திகளையும் மனங்களையும் குறிக்கின்றன.
பல முனிவர்களும் அருட்தொண்டர்களும் எப்போதுமே மெய்யியல்புக்கு (Reality) மிக அருகில் உள்ள படித்தரத்தில் நிலைபெற்று இருந்தால் உடல் சுத்தத்தைப் பற்றி சிறிதும் அக்கறை கொள்ளவில்லை என்பது உண்மைதான். தான் உடலல்ல என்ற அக உறுதிப்பாட்டு நம்பிக்கை இல்லாமல் அவர்களைப் போல நடத்தல், வெறும் வெளிவேஷமும் பாசாங்குமாகும். கடலிலிருந்து வெளிவந்த நஞ்சினை உண்டார் ஈடுவரன். ஆனால் சாதாரண மனிதர்கள் உலகத்தின் சிறு நஞ்சுகளைக் கூட நீக்க இயலாத நிலையில், இறைவன் போல நடத்தல் இயலாத காரியம். சாந்த சமநிலையை வளர்த்துக் கொள். இறை நம்பிக்கையை மனதில் நிலை நிறுத்திக்கொள்; அப்போது துணிச்சலுடன், தவறான விளைவுகள் இல்லாமல், உடலின் கோரிக்கைகளை புறக்கணிக்க உரிமை பெறுகிறாய். முனிவர்களின் ஞானத்துக்குச் சவால் விடுதலும், நானும் அவ்வாறு நடந்து கொண்டால் என்ன கெடுதல் விளையும் என்று கேட்டலும் இயலாத காரியம். பெரிதாக உப்பிய அகங்காரத்துடன் ஆன்மிக சாம்ராஜ்யத்துக்குள் துணிந்து செல்லும் போது பெருங்கெடுதல் விளையும்.
உடல் பரிவுடனும் கவனத்துடனும் போஷிக்கப்பட வேண்டும். அதுபோற்றற்குரிய கடமைப் பணியை சாதிப்பதற்கு கொடுக்கப்பட்ட மிகச் சிக்கலான நங்கு இசைந்து இயங்குகின்ற இயந்திரமும் பெறற்கரிய நங்கொடையும் உடலே. அதன் வெளிப்புறம் சுத்தமாகவும், நல்லதன் வசீகரம் நிறைந்தும் இருக்க வேண்டும். ஆனந்தம் எனும் பழத்தின் தோல்தான் இந்த உடல். அதன் சதைப்பற்றுதான் சதையும்,எலும்பும், நரம்பும். உண்ண இயலாத கடினமான விதைதான், வாழ்கையில் கலந்து கொள்கின்ற தீமை. எந்த நோக்கத்துக்கு மரம் நடப்பட்டு போஷிக்கப்பட்டதோ, அந்த பழரசந்தான் அது எல்லோரிடனும் பகிர்ந்து கொள்ளும் ஆனந்தம். குணசீலம் சிறப்பாக இருந்தால், உடல் ஒளிவீசும். மனிதனுக்கு சேவை செய்தலும், இறைவனை வழிபடுதலும் அதன் வசீகரத்தைப் பாதுகாக்கும். மனிதனின் மிக அற்பமான செயலில் கூட, அதனை இனிமைப்படுத்துகின்ற தன்னலமற்ற அன்பின் சுவடாவது காணப்படுகிறதா என்று இறைவன் ஆயிரம் கண்களுடன் கவனித்துக் கொண்டிருப்பார்.
பண்டைக்காலத்தில், வியாதிகள் இயற்கை தந்த எளிய நிவாரணிகளான வேர்கள், கிழங்குகள், பழங்கள், இலைகள் போன்றவைகளாலும் ஓய்வு, வீடு மாற்றம், உணவுப் பத்தியம், ஆன்மிகப் பயிற்சி இன்ன பிறவற்றால் குணம் பெற்றன. ஆனால் இப்போது மாத்திரைகளையும், மருந்தூசிகளையும் கொண்டு பிழைக்கிறான். மருத்துவர்கள் மூலம்தான் உடல் நலம் பாதுகாக்கப்படுகிறது, பராமரிக்கப்படுகிறது என்றோ, மருந்துகள்தான் அதற்கு உத்தரவாதம் தருகின்றது என்றோ நம்பாதீர்கள். அவ்வாறிருந்தால் இறந்தவர்களெல்லாம் இப்போது உயிருடன் இருப்பார்கள். பிறருக்குத் தருகின்ற அறிவுரையை மருத்துவர்கள் தாமே பின்பற்றுகிறார்களா என்று சோதித்துப் பாருங்கள். பிறருக்கு கெடுதல் என்று எந்த பழக்கங்களை கூறுகிறார்களோ, அவற்றிற்கு அவர்களே அடிமையாக இருக்கிறார்கள். புகைத்தலும், மது அருந்துதலும் உடலுக்கு அபாயம் என்று எச்சரிக்கிறார்கள், ஆனால் அவர்கள் அவற்றில் ஈடுபடுகிறார்கள். ஆகவே அவர்கள் பழிக்கும் தீமைக்கு அவர்களே ஊக்கந்தருகிறார்கள்.
இத்தகைய மருத்துவ ஆலோசகர்கள்தான் நம்மிடம் இருக்கிறார்கள். ஒவ்வொரு துறையிலும் ஆன்மிகம், நீதிநெறி, பொருளாதாரம், அரசியல், இலக்கியம் சரியான தலைவர்கள் இல்லாதிருப்பதே, உலகத்தைத் துன்புறுத்துகின்ற மனவேதனை, கவலை, பயம் இவற்றிற்கு மூலகாரணம்.
நீங்கள் அனைவரும் திவ்யாத்ம வடிவங்கள். பிறர் கண்டுகொள்ள வேண்டுமென்றோ, மதிக்க வேண்டுமென்றோ, தீவிர விருப்பங்கொள்ளாதீர். இறையருள் பெற வேண்டுமென்று தீவிர விருப்பங்கொள்ளுங்கள். அந்தக் குறிக்கோளைப் பின்தொடரும் போது, தடங்கல்களும் இடைஞ்சல்களும் எதிர்பட்டால், அவற்றால் திசைமாறாதீர்கள்.
No comments:
Post a Comment