Friday, 13 August 2010

அகண்ட சாயி காயத்ரீ பாராயணம்

ஓம் ஸ்ரீ சாயி லோக சோக விநாசகாய நம:

ஓம் சாயீஸ்வராய வித்மஹே
சத்ய தேவாய தீமஹி
தன்ன சர்வ ப்ரசோதயாத்


அகண்ட சாயி காயத்ரீ பாராயணம்

நாள்: 29.08.2010(ஞாயிற்றுக்கிழமை),
நேரம் : காலை 7.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை,
இடம்
: ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதி,A 31,சத்ய சாயி நகர் சாலை,TVS நகர்,
மதுரை- 3


சாயிராம்,
பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் பெருங்கருணையால் வருகிற ஆகஸ்டு 29 ம் தேதி அன்று அனைத்துலக நலன் கருதி காலை 7 மணி தொடங்கி மதியம் 1 மணி வரை தொடர்ந்து 6 மணி நேரம் பகவான் ஸ்ரீ சத்ய சாயி காயத்ரீ மந்திர பாராயணம் நடைபெற உள்ளது, அவ்வமயம் தாங்கள் தவறாது கலந்து கொண்டு பகவான் பாபாவின் பேரருளுக்கு பாத்திரமாகும்படி அன்புடன் அழைக்கிறோம்.

என்றும் சாயி சேவையில்,
ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதி,
கோவலன் நகர்,
மதுரை.

மஸ்த லோகா: சுகினோ பவந்து
(அனைத்து உலகமும் இன்புற்று இருக்கட்டும்)

Wednesday, 4 August 2010

இரண்டு வழிகள்

" மோட்சத்திற்கான வழி இரண்டுதான். ஒன்று உன் சிறிய 'நானை' எல்லை இல்லாததாக அனந்தமாக விச்தரித்துக்கொள். அல்லது, அதை சுருக்கிக் கொண்டே போய் பூஜ்யமாக்கிக் கொள். முதலில் சொன்னது - ஞானம்; இரண்டாவது - பக்தி!" - ஸ்ரீ சத்ய சாயி பாபா

Saturday, 31 July 2010

அமுத மொழி

" மழை நீரானது எரி,குளம்,கிணறு,ஆறு ஆகியவற்றில் விழுகிறது. அது விழும் இடத்தை பொறுத்தும் அந்த கொள்கலனின் தூய்மையைப் பொறுத்தும், அதன் சுவை,நிறம்,பெயர்,எல்லாம் வேறுபடுகின்றன. தெய்வீக கருணையும் மழையைப் போல் தூய்மையாக மிகத் தெளிவாக எல்லோர் மீதும்படுகிறது. அது எப்படி பெறப்பட்டு பயன்படுகிறது என்பது மனிதனின் இதயத்தைப் பொறுத்து இருக்கிறது" - ஸ்ரீ சத்ய சாயி பாபா

Friday, 30 July 2010

சாயி வாக்கு

" இறைவனின் அருள் சூரிய ஒளிக்கும், மழைக்கும் சமானம். அதை பெற நீங்கள் சில ஆன்மீக சாதனைகள் செய்ய வேண்டும். பானையை நேராக வைத்தால் தான் மழைநீர் அதற்குள் விழும். அது போல் இதயக்கதவை திறப்பதாகிய ஜபம், தியானம் எனும் ஆன்மீக சாதனையை (பயிற்சியை) செய்து சூரிய ஒளியாகிய இறையருளைப் பெற வேண்டும்" - பாபா

Thursday, 29 July 2010

தெய்வத்தின் குரல்

" அருள் எனும் சூரிய ஒளி உங்களை சுற்றி எப்போதும் உள்ளது. ஆனால் அந்த ஒளியின் பயனைப் பெற, நீங்கள் உங்கள் இதயக் கதவுகளை திறந்து வைத்தே ஆக வேண்டும், இது தான் சுய முயற்சி." - பாபா

Wednesday, 28 July 2010

தெய்வத்தின் குரல்

" தியானம், பஜன், யோகா இவற்றை விட தன்னலமற்ற சேவையே ஆன்மிக முன்னேற்றத்திற்கு சிறந்த வழி. ஏனெனில் நாம் செய்யும் தியானம்,ஜபம் மற்றும் யோகம் நம் நலனுக்காக மட்டுமே அன்றி பிறரது நன்மைக்காக அல்ல. இவை தனிப்பட்ட ஒருவரின் மகிழ்ச்சிக்காகவும் ஆசைகளை நிறைவேற்றுவதற்காகவும் செய்யப்படுவன. நாம் பிறர் நலனை விரும்ப வேண்டுமே தவிர சுயநலத்தை மட்டும் விரும்பக்கூடாது" - பாபா

Saturday, 24 July 2010

தெய்வத்தின் குரல்

"தீப்பெட்டியில் ஒரே ஒரு குச்சி நாம் ஒளி பெறுவதற்கு போதுமானது, இது போன்றே நாம் ஆன்மீக ஒளி பெற நாம் நன்றாக புரிந்து கொண்ட ஏதாவது ஒரு கொள்கையை அல்லது போதனையை தீவிரமாக பயின்றால் அல்லது நடைமுறைப் படுத்தினாலே போதும்" - பாபா

Wednesday, 21 July 2010

தெய்வத்தின் குரல்

"யார் ஒருவரும் தன் இயற்கையான குணங்களை விட்டுவிடும் சக்தி கொண்டவர் அல்ல. அது கடவுளின் அருளினாலேயே உண்டாகிறது. அந்த அருளைப் பெற ஜபமும் தியானமும் உதவும். இந்த உண்மையை உணர்ந்தபிறகே அது தன் உணர்வில் இருந்து நழுவாமல் இருக்கும். அதற்கு உதவும் நல் ஒழுக்கங்கள் ஜபமும் தியானமும் ஆகும். இது முதலில் தெளிவாக உணரப்பட வேண்டும். எல்லோராலும் பிரகிருதி அளிக்கும் குணங்களை கட்டுப்படுத்த முடியாது. அந்த சக்தி பிரகிருதியை தங்கள் கைக்குள் அடக்கி வைத்து அவரது கட்டளைக்கு கீழ்ப்படியுமாறு வைத்திருப்போருக்கே கிடைக்கும். இந்தப் பிரபஞ்சத்தில் பிரகிருதியே அனைத்திற்கும் ஆதாரம். அதுவே படைத்தல் மற்றும் இருத்தல் ஆகியவற்றின் அடிப்படை. ஆண்கள், பெண்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், பயிர்கள் அனைத்தும், அதாவது பார்க்கக்கூடிய யாவையும் பிரகிருதியிடம் இருந்து பிரிக்க முடியாதவை." - பாபா

Tuesday, 20 July 2010

85 பஜன் நிகழ்ச்சி

ஓம் ஸ்ரீ சாயி பஜன ப்ரியாய நம: பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 85வது அவதார பெருவிழா கொண்டட்டம் 85 பஜன் நிகழ்ச்சி சாயிராம், பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 85 வது அவதார பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வருகின்ற குரு பூர்ணிமா தினத்தன்று (25.7.2010) மதுரை கிழக்கு, ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதியின் சார்பில் காலை 7.30 மணி முதல் 85 பஜன் பாடல் நிகழ்ச்சி சமிதியில் நடைப்பெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் தாங்கள் அனைவரும் கலந்து கொண்டு பகவான் பாபாவின் பேரருளை பெற அன்புடன் அழைக்கிறோம். என்றும் சாயி சேவையில் ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதி மதுரை கிழக்கு

Tuesday, 22 June 2010

சாயி பற்றி சாயி
"இந்நாள் மட்டுமல்ல, எந்நாளும் யார் முயன்றாலும், எவ்விதம் ஆராய்ந்தாலும், எத்தனை காலம் தவமிருந்தாலும், என் உண்மை தத்துவம் மக்களுக்கு விளங்காது" என்று தன் அண்ணனுக்கு எழுதிய கடிதத்தில் சுவாமி தன் 14 ஆவது வயதிலேயே குறிப்பிட்டுள்ளார். ஆயினும் ஆங்காங்கு சுவாமி அருளியிருக்கும்,அருளிவரும் சொற்பொழிவுகளுள் தன் ஸ்வரூபம் குறித்து விளக்கம் தந்ததுண்டு. அதிலிருந்து வெளிவந்த விபரங்களில் சிலவற்றினை அடியிற்காணலாம். பெயர்: "எனகென்று தனிப்பெயர் ஏதுமில்லை. எல்லாப் பெயர்களுமே என்னுடயவைதான். எந்த ஒரு பெயரால் அழைத்தாலும் நான் உடனே பதிலளிப்பேன். என்னை நீங்கள் அழைக்காவிடினும் கூட உங்களுக்கு நான் தேவைப்பட்டால் உடனே ஓடிவருவேன்." வயது: "எனக்கு வயதென்பதே இல்லை (வயதிற்கப்பாற்ப்பட்டவன் நான்). என்னுடைய விளையாட்டிற்காக (லீலைக்காக) இந்த பிரபஞ்சத்தை நான் படைத்ததற்கு முன் என்னை புரிந்துகொள்ள எவரும் இல்லை. 'எகோ ஹம் பஹுஷ்யாம்' - நான் ஒருவனே பற்பல தோற்றங்களில் காணப்படுகிறேன்." பெற்றோர்கள்: "என்னுடைய பிறப்பு கர்மத்தின் விளைவாக ஏற்ப்பட்டதல்ல (கர்ம ஜென்மமல்ல). 'ஆத்மானம் ஸ்ருஜாம்யஹம்' - என்னை நானே தோற்றுவிக்கச் சங்கல்ப்பம் கொண்டேன். என்னுடைய பெற்றோர்கள் என்ற சிறப்பான உரிமையை பெரும் தகுதியுல்லோரை நான் தேர்ந்தெடுத்தேன்." நான் குடியிருக்கும் வீடு: "நான் எல்லா இதயங்களிலும் குடி கொண்டுள்ளேன் ('சர்வபூத அந்தராத்மா',ஹ்ருதயவாசி). எல்லா உயிரினங்களுக்குள்ளும் இருப்பவன் நான். உன்னுடைய இதயத்தைப் பரிசுத்தப்படுத்தி அதை பிரசாந்தி நிலையமாக ஆக்கி விட்டாயானால் நான் அங்கு மிக்க மகிழ்ச்சியுடன் வாசம் செய்யத் தொடங்குவேன். இங்கேயுள்ள பிரசாந்தி நிலையம் பக்தர்களுக்காகவே அமைக்கப்பட்டுள்ளது. உங்கள் இதயமே எனக்கான பிரசாந்தி நிலையம்." சொத்து: "நீங்களே எனது சொத்து அல்லது பொக்கிஷம், நிதி எல்லாம். என்னை நீங்கள் ஏற்காவிடினும் மறுத்தாலும், நான் உங்களுடைய சொத்து (நேனு நீவாடு). என்னுடைய சக்திஎல்லாம் உங்களுடைய உபயோகத்திற்காகவேதான்." தொழில்: "பக்தர்களுக்கு புக்தி (நல்வாழ்வு) முக்தி (விடுதலை பேறு) அளிப்பதே எனது தொழில். பக்தர்கள் யார்? இன்பதுன்பங்களை 'எனையாளும் ஈசன் செயல்' என்று என் ஆதீனமாக்கிச் சமநிலையான மனத்துடன் ஏற்பவர்களே எனது பக்தர்கள்." தகுதி: "அன்பு ஒன்றே." பொழுதுபோக்குப் பணி: "பக்தர்களை ரக்ஷிப்பதுடன் மட்டுமே நான் திருப்தியடைந்து விடுவதில்லை. மனித உள்ளங்களில் 'பக்தி' உணர்வை வித்திட்டு,வளர்த்து,அதை நன்கு செழிக்கச் செய்வதிலேயே நான் மகிழ்ச்சி கொள்கிறேன். இதனால் அவர்களை பிறப்பெனும் சுழலிளிருந்து விடுவிக்க வழி வகுக்கிறேன். பக்தி உணர்வைப்பெருக்கி அவர்களை ரக்சிக்கிறேன்." (தொகுப்பு-ஸ்ரீ. என். கஸ்தூரி அவர்கள். தமிழ் சநாதன சாரதி, பகவான் பாபாவின் 60ஆவது அவதார தின சிறப்பு மலரிலிருந்து.)

Sunday, 16 May 2010

பிரார்த்தனை

சமஸ்த லோகா: சுகினோ பவந்து அனைத்து உலகங்களும் (உலகத்தினரும்) இன்புற்று இருக்கட்டும். - வேத மொழி

அசதோமா..

அசதோமா சத் கமய தமசோமா ஜோதிர் கமய மிர்த்யோர்மா அமிர்தம் கமய ---- வேத மந்திரம் ----------- இறைவா... உண்மைஅற்றதில் இருந்து உண்மைக்கு அழைத்துச் செல்லுங்கள், இருளில் இருந்து ஒளிக்கு அழைத்துச் செல்லுங்கள், மரணத்தில் இருந்து மரணமில்லா பெருவாழ்விற்கு அழைத்துச் செல்லுங்கள்!

Sunday, 14 March 2010

வேர்களை வணங்கும் விழுதுகள் - அறிக்கை

பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா அவர்களின் 85ஆவது அவதாரப் பெருவிழாவின் ஒரு பகுதியாக மதுரை மாவட்ட ஸ்ரீ சத்ய சாயி நிறுவனத்தின் ஆரம்ப கால உறுப்பினர்களுள் இன்று நம்மிடையே நடமாடும் மூத்தவர்களை நன்றியுடன் நினைவுகூர்ந்து சிறப்புச் செய்யும் நிகழ்ச்சியே வேர்களை வணங்கும் விழுதுகள் நிகழ்ச்சி ஆகும். இவ்விழா பிப்ரவரி 7 ஆம் நாள் (7 .2 .2010 ) மதுரை சத்ய சாய் நகரில் உள்ள ஸ்ரீ சத்ய சாயி ஆனந்த நிலையத்தில் நடைபெற்றது. காலை 8 .55 மணிக்கு பிரசாந்தி கொடி ஏற்றத்துடன் இவ்விழா தொடங்கியது. தொடர்ந்து சத்ய சாயி இளைஞர் பிரிவினரால் சாயிபஜன் 30 நிமிடங்கள் நடைபெற்றது. திரு.ரவி அவர்கள் அனைவரையும் வரவேற்க, மாவட்டத் தலைவர் திரு.C. ரமேஷ் அவர்கள் தலைமை உரை ஆற்றினார். நிகழ்ச்சியின் தொகுப்பாளர் டாக்டர். P. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை விளக்கினார். பகவான் பாபா அவர்கள் 2005 ஆம் ஆண்டு மூத்தோர்களின் ஆன்மிகச் சக்தியை மதித்து அவர்கள் செய்த சாயி சேவைக்காக பீம ரத சாந்தி நிகழ்ச்சியை நடத்தியது இந்நிகழ்ச்சிக்கு முன்னுதாரணம் என்று கூறினார்.மேலும் சாயி நிறுவனங்களின் அங்கத்தினர்கள் தாங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளை நாள், மாதம், ஆண்டுடன் பதிவு செய்து பாதுகாக்க வேண்டியது ஒரு வரலாற்றுக் கடமையாகும் என்பதை வலியுறுத்தினார். வணங்கப்பட்ட வேர்களாகிய, திரு. A .குளத்து கணேசன் , திரு. பிச்சை கணபதி, திருமதி. இராம லட்சுமி கணபதி, திரு. P.S.A.S.ஸ்ரீனிவாசன் செட்டியார் , டாக்டர். M .முத்து கிருஷ்ணன், திருமதி. பங்கஜம் இராமச்சந்திரன், திருமதி. மீனாட்சி சொக்கலிங்கம் ஆகியோர் ஆற்றிய பணி,அவர்களின் சாயி அனுபவம் பற்றிய சிறு குறிப்பு வாசிக்கப்பட்டது. அவர்களுக்கு, தற்போது நிறுவனத்தில் தீவிரப் பணியாளர்களாக இருக்கும் மூத்தோர்கள் பொன்னாடை போர்த்தினர். மேலும் வேர்களின் குறிப்பு அடங்கிய சிறு கையேடு அனைவருக்கும் வழங்கப்பட்டது. அன்று சாயி பணியாற்றி இன்று சாயி பாதத்தில் கலந்துவிட்டவர்களைப் பற்றி திரு. ஹரிஹரன் அவர்கள் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார். பின்பு 1960 களில் மதுரை பக்தர்கள் நமது பகவானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், அவர்கள் செய்த சாயிப்பணிகள் பற்றிய புகைப்படங்கள் Slide Show வாக பெரியதிரையில் காண்பிக்கப்பட்டது. தேநீர் இடைவேளைக்குப் பிறகு பால விகாஸ் குழந்தைகளின் குறு நாடகம் நடைபெற்றது. இதன் பிறகு கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் (வேர்கள்) தங்கள் இனிய சாயி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். திரு.A .குளத்து கணேசன் அவர்கள், * பகவான் அவர்கள், இவரின் இல்லத்திற்கு வந்த போது செய்த லீலைகள் (முக்கியமாக பீர்க்கங்காய் பஜ்ஜி உண்டது), * இவரின் மைந்தன் நாகசுந்தரத்தின் இதய நோயை பகவான் அவர்கள் விபூதி தடவி குணமாக்கியது, * பகவானின் 50 ஆவது பிறந்த நாள் விழாவிற்கு மதுரை சாயி நிறுவனத்தினர் சென்ற போது வாசற்க் கதவை திறக்கச் சொல்லி பகவானே வரவேற்றது, ஆகிய நிகழ்ச்சிகளை நினைவுகூர்ந்தார். திரு,ஸ்ரீனிவாசன் செட்டியார் அவர்கள், * தனது தந்தை திரு. சுப்பிரமணியம் செட்டியார் அவர்கள் சுவாமியிடம் வைத்திருந்த பக்தி, * தங்க ரதத்தில் சுவாமி உலா வந்த நிகழ்ச்சி , * பர்த்தி குல்வந்த் ஹாலின் மேற்கூரையை அழகு செய்த போது நடந்த நிகழ்வுகள், ஆகியவற்றை அனைவரும் நெகிழ்ச்சியுறும் விதத்தில் விளக்கினார். திரு.முத்து கிருஷ்ணன் அவர்கள், பகவான் அவர்கள் கலியுக அவதாரம் என்பதை வலியுறுத்தி, பகவானின் பிரேமையை நினைந்து நினைந்து மனம் மகிழ்ந்தார். திருமதி.பங்கஜம் இராமச்சந்திரன் அவர்கள்,பகவான் அவர்கள் இல்லத்திற்கு வந்த போது உணவு பரிமாறியது, சுவாமியின் பிறந்த நாள் சமயங்களில் பெரிய அளவில் நாராயண சேவை செய்தது ஆகியவற்றை கூறினார். பகவான் இவரை "நல்ல பெண்" என்று கூறியதையும்,உணவு பரிமாறும் கலை, வெற்றிலை மடிப்பது எப்படி என்று பகவானே இவருக்கு சொல்லிக்கொடுத்தத்தையும் கண்ணீருடன் நினைவுகூர்ந்தார். 85 வயதான திருமதி.மீனாட்சி சொக்கலிங்கம் அனைவரையும் ஆசிகூறி அமைந்தார். திடீர் உடல் நலக் குறைவின் காரணமாக இந் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத திரு.பிச்சை கணபதி மற்றும் அவரது துணைவியார் திருமதி.இராம லட்சுமி கணபதி அவர்கள் வீடியோ கட்சி மூலம் தங்கள் நினைவுகளைப் பகிந்து கொண்டனர். திரு.பிச்சை கணபதி அவர்கள், * நினைத்த போதெல்லாம்,வீட்டைக் கூடப் பூட்ட மறந்து,புட்டபர்த்திக்குப் போனதையும், * பர்த்தியில் எந்தவித பாகுபாடும் இன்றி தானும் ஜெனரல் கரியப்பாவும் அடுத்தடுத்து மரத்தடியில் தூங்கியதையும் நினைவுகூர்ந்தார். திருமதி.இராம லட்சுமி கணபதி அவர்கள், * பால விகாஸ் குருவான இவர்,பாடத்திட்டம் இல்லாத அந்த காலத்திலேயே தானே பாடத்திட்டம் உருவாக்கி,குழந்தைகளுக்குக் தேர்வு வைத்ததையும், * நூற்றுக் கணக்கான குழந்தைகளுக்குப் பாடம் நடத்தி,அவர்களை நிறுவனக் கொண்டாட்டங்களில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைத்ததையும் நினைவு கூர்ந்தார். பின்பு இப்பெரியோர்களுக்கு வாழ்த்து மடல் வாசித்து வழங்கப்பட்டது.மேலும் இவர்களுக்கு நினைவுப் பரிசாக கேடயம், பகவான் படம் பொறித்த குடை,2010 ஆம் வருட நாட்குறிப்பு ( சாயி டைரி) ஆகியவை வழங்கப்பட்டன. திரு.சுரேஷ் அவர்கள் நன்றியுரை நவில பகவானுக்கு மங்கள ஆரத்தி காட்டப்பட்டது. இந்நிகழ்சியில் கலந்து கொண்ட 280 க்கும் அதிகமான சாயி பக்தர்கள் ஆனந்தத்துடன் வீடு திரும்பினர். அனைவருக்கும் சுவாமியின் பிரசாதமாக உணவு வழங்கப்பட்டது. ஜெய் சாய்ராம்

Sunday, 31 January 2010

வேர்களை வணங்கும் விழுதுகள்

நாள்:7.2.2010(ஞாயிறு), நேரம்:காலை 9.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை, இடம்: ஸ்ரீ சத்ய சாயி ஆனந்த நிலையம்,மதுரை. மதுரை சத்ய சாயி நிறுவனத்தின் தொடக்கத்தில் வேர்களாய் இருந்து பணிபுரிந்த ௭ழு மூத்தோர்களை தேர்ந்தெடுத்து அவர்களை கௌரவிக்கும் இன் நிகழ்சியில் அனைவரும் கலந்து கொண்டு சாயி அருள் பெற அன்புடன் அழைக்கின்றோம்.

Sunday, 17 January 2010

சனாதன சாரதி


Sanathana Sarathi Free Audio CD

January 15, 2010

Audio CD of Sanathana Sarathi (English) is available in MP3 format from September 2009 issue onwards. To visually challenged individuals and Institutions serving them the CD will be supplied free upon request. For others, it is available for Rs. 49 per CD.

Requests/orders may be addressed to:

The Convener, Sri Sathya Sai Sadhana Trust, Publications Division, Prasanthi Nilayam, Anantapur District, Andhra Pradesh, Pin Code: 515134.

நன்றி:சாயி சேவா காஞ்சி நியூஸ் லெட்டர்

Wednesday, 13 January 2010

ஸ்ரீ சத்ய சாயி தேசிய நாராயண சேவை திட்டம்


ஸ்ரீ சத்ய சாயி தேசிய நாராயண சேவை திட்டம்

January 13, 2010

Bhagawan Sri Sathya Sai Baba

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா

‘தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் அவனுக்கு உணவினை அளித்திடுவோம்’ என்ற பெருங்கருணை கொண்ட பகவானின் ஆசியோடு ஸ்ரீ சத்ய சாயி தேசிய நாராயண சேவைத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

ஊட்டக் குறைவுள்ள, நலிந்த குடும்பங்களுக்கு உணவுப் பொருள் வழங்குவது இதன் நோக்கமாகும். நகர்ப்புறங்களில் சாலையோரத்தில் சமைக்கவும் வழியின்றி வசிக்கும் பிச்சைக்காரர்களுக்குச் சமைத்த உணவாகவே வழங்கலாம்.

சாயி பக்தர்கள் மற்றும் இத் திட்டத்தில் பங்குபெற விரும்புவோர், தமது இல்லத்தில் தினமும் ஒரு நபருக்கான அரிசி, பருப்பு ஆகியவற்றைத் தனியாக எடுத்து வைக்கவேண்டும். அதாவது ஒரு குடும்பத்தில் 5 பேர் இருந்தால், அவர்களுக்கான உணவு தானியத்தில் 20 சதவிகிதத்தை எடுத்து வைக்கவேண்டும். உணவு தானியத்தின் அளவில் நான்கில் ஒரு பங்கு பருப்பு எடுத்து வைக்க வேண்டும்.

மேற்கூறியவாறு எடுத்து வைக்கப்பட்ட தானியம் மற்றும் பருப்பைத் தமது சமிதி/பஜனை மண்டலியில் அவற்றுக்கென வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களில் சேர்த்துவிட வேண்டும். அந்தப் பாத்திரங்களின் மீது ‘ஸ்ரீ சத்ய சாயி நாராயண சேவைத் திட்டம்’ என்று எழுதி வைத்துவிட வேண்டும்.

தமது சேவைப் பகுதியில் இருக்கும் ஓர் இடத்தை ஒவ்வொரு சமிதி/மண்டலியும் இந்தத் திட்டத்துக்கு தத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

நலிந்த குடும்பங்கள்/நபர்கள் கணக்கெடுக்கப் பட வேண்டும். இது SSVIP கிராமங்களுக்குச் செய்யும் கணக்கீட்டின் அடிப்படையில் அமையும்.

வாரம் ஒருமுறை (அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை), கணக்கீட்டில் வந்த குடும்பங்களுக்கு, இந்த உணவுப் பொருள்களைக் கொண்ட அமிர்த கலசம் வழங்கப்படும்.

வீடற்றவர்களுக்கும் பிச்சைக்காரர்களுக்கும் (குறிப்பாக நகரங்களிலும், புற நகர்களிலும்) உணவைச் சமைத்து வழங்க வேண்டும். ஏனெனில் சமைக்கும் வசதிகூட அவர்களுக்கு இருக்காது.

சமிதி/மண்டலியின் மகிளா பிரிவைச் சேர்ந்தவர்கள் சமைக்கும் பணியை ஒரு பொது இடத்தில் மேற்கொள்ள வேண்டும். அதாவது, (1) வீடுகளில் சமைக்கக் கூடாது. (2) சமைத்த உணவாக விலைக்கு வாங்கக் கூடாது.

மாதம் ஒரு முறை சாயி இளைஞர்களையும் குரூப் II பாலவிகாஸ் குழந்தைகளையும் இந்தப் பணியில் ஈடுபடுத்தலாம்.

சமைத்த உணவை வினியோகிக்கும் பணியை இளைஞர் பிரிவு செய்ய வேண்டும்.

அன்பர்கள் கொடுத்த தானியம், பருப்பு வகைகளையே சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும்.

இதற்கென நிதி வசூல் செய்யக் கூடாது.

இது அரசு அல்லது வேறெந்த அமைப்பின் திட்டத்திலும் சேராது.

இந்தத் திட்டத்தில் பங்கேற்க எந்தவித வற்புறுத்தலும் கூடாது.

”இதில் பங்கேற்கும் ஒவ்வொரு அன்பரும் பகவானின் இதயத்தோடு உறவு கொண்டிருப்பார்” என்று கூறப்பட்டுள்ளது இத்திட்டத்தின் அதீத முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

பகவானின் நல்லாசிகளோடு ஒவ்வொருவரும் இதில் ஈடுபடுவோம், நல்ல மனம் கொண்ட அன்பர்களை ஈடுபடுத்துவோம்.

நன்றி :காஞ்சி மாவட்ட செய்தி மலர்

Monday, 4 January 2010

புத்தாண்டு பொன்மொழி

பகவான் பாபாவின் புத்தாண்டு பொன் மொழி " என்று உன் இதயத்தில் புதிய,புனித எண்ணங்கள் தோன்றுகிறதோ அதுவே புத்தாண்டு தினமாகும்"