ஸ்ரீ சத்ய சாயி தேசிய நாராயண சேவை திட்டம்
January 13, 2010
‘தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் அவனுக்கு உணவினை அளித்திடுவோம்’ என்ற பெருங்கருணை கொண்ட பகவானின் ஆசியோடு ஸ்ரீ சத்ய சாயி தேசிய நாராயண சேவைத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
ஊட்டக் குறைவுள்ள, நலிந்த குடும்பங்களுக்கு உணவுப் பொருள் வழங்குவது இதன் நோக்கமாகும். நகர்ப்புறங்களில் சாலையோரத்தில் சமைக்கவும் வழியின்றி வசிக்கும் பிச்சைக்காரர்களுக்குச் சமைத்த உணவாகவே வழங்கலாம்.
சாயி பக்தர்கள் மற்றும் இத் திட்டத்தில் பங்குபெற விரும்புவோர், தமது இல்லத்தில் தினமும் ஒரு நபருக்கான அரிசி, பருப்பு ஆகியவற்றைத் தனியாக எடுத்து வைக்கவேண்டும். அதாவது ஒரு குடும்பத்தில் 5 பேர் இருந்தால், அவர்களுக்கான உணவு தானியத்தில் 20 சதவிகிதத்தை எடுத்து வைக்கவேண்டும். உணவு தானியத்தின் அளவில் நான்கில் ஒரு பங்கு பருப்பு எடுத்து வைக்க வேண்டும்.
மேற்கூறியவாறு எடுத்து வைக்கப்பட்ட தானியம் மற்றும் பருப்பைத் தமது சமிதி/பஜனை மண்டலியில் அவற்றுக்கென வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களில் சேர்த்துவிட வேண்டும். அந்தப் பாத்திரங்களின் மீது ‘ஸ்ரீ சத்ய சாயி நாராயண சேவைத் திட்டம்’ என்று எழுதி வைத்துவிட வேண்டும்.
தமது சேவைப் பகுதியில் இருக்கும் ஓர் இடத்தை ஒவ்வொரு சமிதி/மண்டலியும் இந்தத் திட்டத்துக்கு தத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
நலிந்த குடும்பங்கள்/நபர்கள் கணக்கெடுக்கப் பட வேண்டும். இது SSVIP கிராமங்களுக்குச் செய்யும் கணக்கீட்டின் அடிப்படையில் அமையும்.
வாரம் ஒருமுறை (அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை), கணக்கீட்டில் வந்த குடும்பங்களுக்கு, இந்த உணவுப் பொருள்களைக் கொண்ட அமிர்த கலசம் வழங்கப்படும்.
வீடற்றவர்களுக்கும் பிச்சைக்காரர்களுக்கும் (குறிப்பாக நகரங்களிலும், புற நகர்களிலும்) உணவைச் சமைத்து வழங்க வேண்டும். ஏனெனில் சமைக்கும் வசதிகூட அவர்களுக்கு இருக்காது.
சமிதி/மண்டலியின் மகிளா பிரிவைச் சேர்ந்தவர்கள் சமைக்கும் பணியை ஒரு பொது இடத்தில் மேற்கொள்ள வேண்டும். அதாவது, (1) வீடுகளில் சமைக்கக் கூடாது. (2) சமைத்த உணவாக விலைக்கு வாங்கக் கூடாது.
மாதம் ஒரு முறை சாயி இளைஞர்களையும் குரூப் II பாலவிகாஸ் குழந்தைகளையும் இந்தப் பணியில் ஈடுபடுத்தலாம்.
சமைத்த உணவை வினியோகிக்கும் பணியை இளைஞர் பிரிவு செய்ய வேண்டும்.
அன்பர்கள் கொடுத்த தானியம், பருப்பு வகைகளையே சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும்.
இதற்கென நிதி வசூல் செய்யக் கூடாது.
இது அரசு அல்லது வேறெந்த அமைப்பின் திட்டத்திலும் சேராது.
இந்தத் திட்டத்தில் பங்கேற்க எந்தவித வற்புறுத்தலும் கூடாது.
”இதில் பங்கேற்கும் ஒவ்வொரு அன்பரும் பகவானின் இதயத்தோடு உறவு கொண்டிருப்பார்” என்று கூறப்பட்டுள்ளது இத்திட்டத்தின் அதீத முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
பகவானின் நல்லாசிகளோடு ஒவ்வொருவரும் இதில் ஈடுபடுவோம், நல்ல மனம் கொண்ட அன்பர்களை ஈடுபடுத்துவோம்.
நன்றி :காஞ்சி மாவட்ட செய்தி மலர்
No comments:
Post a Comment