Tuesday, 20 July 2010

85 பஜன் நிகழ்ச்சி

ஓம் ஸ்ரீ சாயி பஜன ப்ரியாய நம: பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 85வது அவதார பெருவிழா கொண்டட்டம் 85 பஜன் நிகழ்ச்சி சாயிராம், பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 85 வது அவதார பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வருகின்ற குரு பூர்ணிமா தினத்தன்று (25.7.2010) மதுரை கிழக்கு, ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதியின் சார்பில் காலை 7.30 மணி முதல் 85 பஜன் பாடல் நிகழ்ச்சி சமிதியில் நடைப்பெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் தாங்கள் அனைவரும் கலந்து கொண்டு பகவான் பாபாவின் பேரருளை பெற அன்புடன் அழைக்கிறோம். என்றும் சாயி சேவையில் ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதி மதுரை கிழக்கு

Tuesday, 22 June 2010

சாயி பற்றி சாயி
"இந்நாள் மட்டுமல்ல, எந்நாளும் யார் முயன்றாலும், எவ்விதம் ஆராய்ந்தாலும், எத்தனை காலம் தவமிருந்தாலும், என் உண்மை தத்துவம் மக்களுக்கு விளங்காது" என்று தன் அண்ணனுக்கு எழுதிய கடிதத்தில் சுவாமி தன் 14 ஆவது வயதிலேயே குறிப்பிட்டுள்ளார். ஆயினும் ஆங்காங்கு சுவாமி அருளியிருக்கும்,அருளிவரும் சொற்பொழிவுகளுள் தன் ஸ்வரூபம் குறித்து விளக்கம் தந்ததுண்டு. அதிலிருந்து வெளிவந்த விபரங்களில் சிலவற்றினை அடியிற்காணலாம். பெயர்: "எனகென்று தனிப்பெயர் ஏதுமில்லை. எல்லாப் பெயர்களுமே என்னுடயவைதான். எந்த ஒரு பெயரால் அழைத்தாலும் நான் உடனே பதிலளிப்பேன். என்னை நீங்கள் அழைக்காவிடினும் கூட உங்களுக்கு நான் தேவைப்பட்டால் உடனே ஓடிவருவேன்." வயது: "எனக்கு வயதென்பதே இல்லை (வயதிற்கப்பாற்ப்பட்டவன் நான்). என்னுடைய விளையாட்டிற்காக (லீலைக்காக) இந்த பிரபஞ்சத்தை நான் படைத்ததற்கு முன் என்னை புரிந்துகொள்ள எவரும் இல்லை. 'எகோ ஹம் பஹுஷ்யாம்' - நான் ஒருவனே பற்பல தோற்றங்களில் காணப்படுகிறேன்." பெற்றோர்கள்: "என்னுடைய பிறப்பு கர்மத்தின் விளைவாக ஏற்ப்பட்டதல்ல (கர்ம ஜென்மமல்ல). 'ஆத்மானம் ஸ்ருஜாம்யஹம்' - என்னை நானே தோற்றுவிக்கச் சங்கல்ப்பம் கொண்டேன். என்னுடைய பெற்றோர்கள் என்ற சிறப்பான உரிமையை பெரும் தகுதியுல்லோரை நான் தேர்ந்தெடுத்தேன்." நான் குடியிருக்கும் வீடு: "நான் எல்லா இதயங்களிலும் குடி கொண்டுள்ளேன் ('சர்வபூத அந்தராத்மா',ஹ்ருதயவாசி). எல்லா உயிரினங்களுக்குள்ளும் இருப்பவன் நான். உன்னுடைய இதயத்தைப் பரிசுத்தப்படுத்தி அதை பிரசாந்தி நிலையமாக ஆக்கி விட்டாயானால் நான் அங்கு மிக்க மகிழ்ச்சியுடன் வாசம் செய்யத் தொடங்குவேன். இங்கேயுள்ள பிரசாந்தி நிலையம் பக்தர்களுக்காகவே அமைக்கப்பட்டுள்ளது. உங்கள் இதயமே எனக்கான பிரசாந்தி நிலையம்." சொத்து: "நீங்களே எனது சொத்து அல்லது பொக்கிஷம், நிதி எல்லாம். என்னை நீங்கள் ஏற்காவிடினும் மறுத்தாலும், நான் உங்களுடைய சொத்து (நேனு நீவாடு). என்னுடைய சக்திஎல்லாம் உங்களுடைய உபயோகத்திற்காகவேதான்." தொழில்: "பக்தர்களுக்கு புக்தி (நல்வாழ்வு) முக்தி (விடுதலை பேறு) அளிப்பதே எனது தொழில். பக்தர்கள் யார்? இன்பதுன்பங்களை 'எனையாளும் ஈசன் செயல்' என்று என் ஆதீனமாக்கிச் சமநிலையான மனத்துடன் ஏற்பவர்களே எனது பக்தர்கள்." தகுதி: "அன்பு ஒன்றே." பொழுதுபோக்குப் பணி: "பக்தர்களை ரக்ஷிப்பதுடன் மட்டுமே நான் திருப்தியடைந்து விடுவதில்லை. மனித உள்ளங்களில் 'பக்தி' உணர்வை வித்திட்டு,வளர்த்து,அதை நன்கு செழிக்கச் செய்வதிலேயே நான் மகிழ்ச்சி கொள்கிறேன். இதனால் அவர்களை பிறப்பெனும் சுழலிளிருந்து விடுவிக்க வழி வகுக்கிறேன். பக்தி உணர்வைப்பெருக்கி அவர்களை ரக்சிக்கிறேன்." (தொகுப்பு-ஸ்ரீ. என். கஸ்தூரி அவர்கள். தமிழ் சநாதன சாரதி, பகவான் பாபாவின் 60ஆவது அவதார தின சிறப்பு மலரிலிருந்து.)

Sunday, 16 May 2010

பிரார்த்தனை

சமஸ்த லோகா: சுகினோ பவந்து அனைத்து உலகங்களும் (உலகத்தினரும்) இன்புற்று இருக்கட்டும். - வேத மொழி

அசதோமா..

அசதோமா சத் கமய தமசோமா ஜோதிர் கமய மிர்த்யோர்மா அமிர்தம் கமய ---- வேத மந்திரம் ----------- இறைவா... உண்மைஅற்றதில் இருந்து உண்மைக்கு அழைத்துச் செல்லுங்கள், இருளில் இருந்து ஒளிக்கு அழைத்துச் செல்லுங்கள், மரணத்தில் இருந்து மரணமில்லா பெருவாழ்விற்கு அழைத்துச் செல்லுங்கள்!

Sunday, 14 March 2010

வேர்களை வணங்கும் விழுதுகள் - அறிக்கை

பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா அவர்களின் 85ஆவது அவதாரப் பெருவிழாவின் ஒரு பகுதியாக மதுரை மாவட்ட ஸ்ரீ சத்ய சாயி நிறுவனத்தின் ஆரம்ப கால உறுப்பினர்களுள் இன்று நம்மிடையே நடமாடும் மூத்தவர்களை நன்றியுடன் நினைவுகூர்ந்து சிறப்புச் செய்யும் நிகழ்ச்சியே வேர்களை வணங்கும் விழுதுகள் நிகழ்ச்சி ஆகும். இவ்விழா பிப்ரவரி 7 ஆம் நாள் (7 .2 .2010 ) மதுரை சத்ய சாய் நகரில் உள்ள ஸ்ரீ சத்ய சாயி ஆனந்த நிலையத்தில் நடைபெற்றது. காலை 8 .55 மணிக்கு பிரசாந்தி கொடி ஏற்றத்துடன் இவ்விழா தொடங்கியது. தொடர்ந்து சத்ய சாயி இளைஞர் பிரிவினரால் சாயிபஜன் 30 நிமிடங்கள் நடைபெற்றது. திரு.ரவி அவர்கள் அனைவரையும் வரவேற்க, மாவட்டத் தலைவர் திரு.C. ரமேஷ் அவர்கள் தலைமை உரை ஆற்றினார். நிகழ்ச்சியின் தொகுப்பாளர் டாக்டர். P. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை விளக்கினார். பகவான் பாபா அவர்கள் 2005 ஆம் ஆண்டு மூத்தோர்களின் ஆன்மிகச் சக்தியை மதித்து அவர்கள் செய்த சாயி சேவைக்காக பீம ரத சாந்தி நிகழ்ச்சியை நடத்தியது இந்நிகழ்ச்சிக்கு முன்னுதாரணம் என்று கூறினார்.மேலும் சாயி நிறுவனங்களின் அங்கத்தினர்கள் தாங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளை நாள், மாதம், ஆண்டுடன் பதிவு செய்து பாதுகாக்க வேண்டியது ஒரு வரலாற்றுக் கடமையாகும் என்பதை வலியுறுத்தினார். வணங்கப்பட்ட வேர்களாகிய, திரு. A .குளத்து கணேசன் , திரு. பிச்சை கணபதி, திருமதி. இராம லட்சுமி கணபதி, திரு. P.S.A.S.ஸ்ரீனிவாசன் செட்டியார் , டாக்டர். M .முத்து கிருஷ்ணன், திருமதி. பங்கஜம் இராமச்சந்திரன், திருமதி. மீனாட்சி சொக்கலிங்கம் ஆகியோர் ஆற்றிய பணி,அவர்களின் சாயி அனுபவம் பற்றிய சிறு குறிப்பு வாசிக்கப்பட்டது. அவர்களுக்கு, தற்போது நிறுவனத்தில் தீவிரப் பணியாளர்களாக இருக்கும் மூத்தோர்கள் பொன்னாடை போர்த்தினர். மேலும் வேர்களின் குறிப்பு அடங்கிய சிறு கையேடு அனைவருக்கும் வழங்கப்பட்டது. அன்று சாயி பணியாற்றி இன்று சாயி பாதத்தில் கலந்துவிட்டவர்களைப் பற்றி திரு. ஹரிஹரன் அவர்கள் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார். பின்பு 1960 களில் மதுரை பக்தர்கள் நமது பகவானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், அவர்கள் செய்த சாயிப்பணிகள் பற்றிய புகைப்படங்கள் Slide Show வாக பெரியதிரையில் காண்பிக்கப்பட்டது. தேநீர் இடைவேளைக்குப் பிறகு பால விகாஸ் குழந்தைகளின் குறு நாடகம் நடைபெற்றது. இதன் பிறகு கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் (வேர்கள்) தங்கள் இனிய சாயி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். திரு.A .குளத்து கணேசன் அவர்கள், * பகவான் அவர்கள், இவரின் இல்லத்திற்கு வந்த போது செய்த லீலைகள் (முக்கியமாக பீர்க்கங்காய் பஜ்ஜி உண்டது), * இவரின் மைந்தன் நாகசுந்தரத்தின் இதய நோயை பகவான் அவர்கள் விபூதி தடவி குணமாக்கியது, * பகவானின் 50 ஆவது பிறந்த நாள் விழாவிற்கு மதுரை சாயி நிறுவனத்தினர் சென்ற போது வாசற்க் கதவை திறக்கச் சொல்லி பகவானே வரவேற்றது, ஆகிய நிகழ்ச்சிகளை நினைவுகூர்ந்தார். திரு,ஸ்ரீனிவாசன் செட்டியார் அவர்கள், * தனது தந்தை திரு. சுப்பிரமணியம் செட்டியார் அவர்கள் சுவாமியிடம் வைத்திருந்த பக்தி, * தங்க ரதத்தில் சுவாமி உலா வந்த நிகழ்ச்சி , * பர்த்தி குல்வந்த் ஹாலின் மேற்கூரையை அழகு செய்த போது நடந்த நிகழ்வுகள், ஆகியவற்றை அனைவரும் நெகிழ்ச்சியுறும் விதத்தில் விளக்கினார். திரு.முத்து கிருஷ்ணன் அவர்கள், பகவான் அவர்கள் கலியுக அவதாரம் என்பதை வலியுறுத்தி, பகவானின் பிரேமையை நினைந்து நினைந்து மனம் மகிழ்ந்தார். திருமதி.பங்கஜம் இராமச்சந்திரன் அவர்கள்,பகவான் அவர்கள் இல்லத்திற்கு வந்த போது உணவு பரிமாறியது, சுவாமியின் பிறந்த நாள் சமயங்களில் பெரிய அளவில் நாராயண சேவை செய்தது ஆகியவற்றை கூறினார். பகவான் இவரை "நல்ல பெண்" என்று கூறியதையும்,உணவு பரிமாறும் கலை, வெற்றிலை மடிப்பது எப்படி என்று பகவானே இவருக்கு சொல்லிக்கொடுத்தத்தையும் கண்ணீருடன் நினைவுகூர்ந்தார். 85 வயதான திருமதி.மீனாட்சி சொக்கலிங்கம் அனைவரையும் ஆசிகூறி அமைந்தார். திடீர் உடல் நலக் குறைவின் காரணமாக இந் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத திரு.பிச்சை கணபதி மற்றும் அவரது துணைவியார் திருமதி.இராம லட்சுமி கணபதி அவர்கள் வீடியோ கட்சி மூலம் தங்கள் நினைவுகளைப் பகிந்து கொண்டனர். திரு.பிச்சை கணபதி அவர்கள், * நினைத்த போதெல்லாம்,வீட்டைக் கூடப் பூட்ட மறந்து,புட்டபர்த்திக்குப் போனதையும், * பர்த்தியில் எந்தவித பாகுபாடும் இன்றி தானும் ஜெனரல் கரியப்பாவும் அடுத்தடுத்து மரத்தடியில் தூங்கியதையும் நினைவுகூர்ந்தார். திருமதி.இராம லட்சுமி கணபதி அவர்கள், * பால விகாஸ் குருவான இவர்,பாடத்திட்டம் இல்லாத அந்த காலத்திலேயே தானே பாடத்திட்டம் உருவாக்கி,குழந்தைகளுக்குக் தேர்வு வைத்ததையும், * நூற்றுக் கணக்கான குழந்தைகளுக்குப் பாடம் நடத்தி,அவர்களை நிறுவனக் கொண்டாட்டங்களில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைத்ததையும் நினைவு கூர்ந்தார். பின்பு இப்பெரியோர்களுக்கு வாழ்த்து மடல் வாசித்து வழங்கப்பட்டது.மேலும் இவர்களுக்கு நினைவுப் பரிசாக கேடயம், பகவான் படம் பொறித்த குடை,2010 ஆம் வருட நாட்குறிப்பு ( சாயி டைரி) ஆகியவை வழங்கப்பட்டன. திரு.சுரேஷ் அவர்கள் நன்றியுரை நவில பகவானுக்கு மங்கள ஆரத்தி காட்டப்பட்டது. இந்நிகழ்சியில் கலந்து கொண்ட 280 க்கும் அதிகமான சாயி பக்தர்கள் ஆனந்தத்துடன் வீடு திரும்பினர். அனைவருக்கும் சுவாமியின் பிரசாதமாக உணவு வழங்கப்பட்டது. ஜெய் சாய்ராம்