Sunday, 20 March 2016

சத்குரு நாதன் (காஞ்சி பெரியவர்) பற்றி சத்ய சாயி நாதன் - அமரர். திரு. ரா. கணபதி

சத்குரு நாதன் (காஞ்சி பெரியவர்) பற்றி சத்ய சாயி நாதன்
-    அமரர். திரு. ரா. கணபதி


“காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவாளிடமே ஈடுபட்டிருந்த ரா.கணபதி ஸ்வாமி ஸ்ரீ சத்ய சாயியிடமும் ஈடுபாடு கொண்டது எப்படி? ஸ்வாமி பற்றி பெரியவா அவரிடம் என்ன சொல்லியிருப்பார்?” என்றறிவதில் அனேகம் சாயி பக்தர்களுக்கு மிகுந்த ஆர்வம்.
ஆயினும், எத்தனையோ பக்தர்களின் பரம அந்தரங்க அனுபவங்களைக் கேட்டறிந்து, அவர்கள் அனுமதித்தால் அவற்றுக்கு எழுத்துருவம் தந்து வரும் என்னை எதுவோ ஒன்று இவ்விஷயமாக எழுதவிடாமல் தடுத்து வந்திருகிறது.
சிறப்பு மலர் எதற்கேனும் விஷயதானம் செய்யவிருக்கிறேன் என்று தெரியவரும்போது அந்த சாயி சகோதர்களில் சிலர், “இந்தத் தடவையாவது அந்த விஷயம் எழுதித்தானாக வேண்டும். லாங்ட்யூ (Long Due)!” என்பார்கள்.
“மேலிடத்து” சங்கல்பம் எப்படியோ அப்படி ஆகட்டும்” என்று சொல்லி முடித்து விடுவேன்.
மலர் வந்தபின் இந்தத்தடவையும் ஏமாற்றந்தான் என்று சோதரர்கள் காண்பார்கள். விடாமல் அடுத்த முறையும் கேட்டுக்கொள்வார்கள். வற்புறுத்துவார்கள்.
இதில் ஓர் அம்சம் எனக்கு வேதனையும் வியப்பும் உண்டாக்கும். ஸ்வாமியைப் பற்றி மஹா பெரியவாள் என்ன அபிப்ராயப்படுகிறார்கள் என அறிவதில் ஆர்வம் காட்டுபவர்களில் நூற்றுக்கொருவர்கூட மஹாபெரியவாளைப் பற்றி ஸ்வாமியின் கருத்து என்னவென்று கேட்டதில்லை! இத்தனைக்கும் இவர்களெல்லோரும் முதற்கண் ஸ்வாமி பக்தர்கள்தாம். அதாவது எந்தப் புராண, இதிஹாஸத்திலும் கண்டிராத அளவுக்குப் பிரத்தியக்ஷமாக ஸ்வாமி தங்களுக்கே தரும் அருட்காப்பை நிறைய அனுபவித்திருப்பவர்கள். அப்படியிருந்தும் அவர்கள் மனத்தின் ஒரு மூலையில் மஹா பெரியவாள் அவரை அங்கீகரிக்கிறாரா என்ற கேள்வி இருந்துகொண்டே இருக்கிறது! அந்த அங்கீகார முத்திரை ஸ்வாமியின் ஸ்வாமித்வத்தை அறுதியிட்டு உறுதி செய்ய அவசியம் என்ற எண்ணமும் அந்த மூலையின் மூலையில் ஒலிந்திருக்கிறது! விளக்கடியிலேயே இருப்பவர்கள் அதற்கு வெளிச்சமிருப்பது ஸர்வ நிச்சயந்தானா என்று இன்னொரு விளக்கைக் கொண்டு நிரூபித்துக் கொள்ள விரும்புகிறார்களே என்ற வேதனை!
ஆனால் வேதனையோடு முடியவில்லை. ஓர் உவகை வியப்பும் இதில் காண்கிறேன். சாயி பக்தர்களாகவே தங்களைக் கருதுவோரும் தாங்கள் வழிபடும் நாயகனுக்கு ஒருவரது நற்சான்றை எங்கேயோ ஓரிழை விரும்புகிறார்களென்றால் அந்த ஒருவரான மஹா பெரியவாள் அனைவருக்குமே எப்படி மஹா மஹா பெரியவாளாக இருக்கிறார்கள் என்பதில் வியப்பு! ஆன்மிக உலகில் சுப்ரீம் கோர்ட்டாக அவர்கள் இருப்பதற்கு இதைவிட என்ன வேண்டும்?
சுப்ரீம் கோர்ட் என்பதில் இன்னொரு பொருத்தம். சுப்ரீம் தான் ஆயினும் அந்த கோர்ட்டார் சொந்தமாகப் புதுச்சட்டம் செய்து அதன் அடிப்படையில் தீர்ப்பளிப்பதில்லை. முன்னமே செய்து வைத்துள்ள சட்டங்களைத்தான் துலாமுள் இம்மியும் கோடாமல் நுணுகப்பின்பற்றித் தீர்ப்பளிக்கிறார்கள். தர்ம பீடமொன்றில் “ஆஃபிஸ்” பார்க்கும் தாமும் அவ்வாறே தர்ம சாஸ்திரச் சட்டங்களையும், அவற்றை அநுசரித்து மேன்மக்கள் கடைப்பிடித்து வந்துள்ள ஸம்பிரதாயத்தின் விதிகளையும், அத்வைத சாஸ்திரக் கோட்பாடுகளையும், ஸ்ரீமடத்தின் மரபுகளையும் கூறலாமேயன்றி சொந்த முடிவு என்று எதுவும் எடுக்க அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று ஸ்ரீ மஹா பெரியவாள் அடக்கக் கருவூலமாக எடுத்துக்காட்டியிருக்கிறார்கள். எடுத்துக் காட்டிய உண்மைக்கு உயிர் கொண்ட எடுத்துக்காட்டாக நீண்ட நெடிய பீடாதிபத்தியத்தில் விளங்கியிருக்கிறார்கள். அவரவரும் சொந்தமாக முடிவெடுக்கும் சுதந்திர யுகத்தில், ஜகத்குரு என்ற உன்னத ஸ்தானத்திலிருப்பவர் சாஸ்திர ஸம்பிரதாய முடிவே முடிவு என்று சரணாகதி செய்துள்ள எளிமை தான் எவ்வளவு பெருமை வாய்ந்தது?
பொதுவாக அவர் கருத்து தெரிவிக்கையில் தமக்கு ஏற்பட்ட மரபு வழிகளைத்தான் நூறு சதமும் ஒப்பி, ஒட்டிப் பேசுவார். ஆயினும் தனியாருக்கு அந்தரங்கமாக உபதேசிக்கையில் அவ்வொரு ஜீவனுக்கு மட்டும் அவர் குருவாக நிற்பாராதலால், அவ்வொருவரின் கர்மத்தைப் பொறுத்து வழி கூறுகையில் தமது சட்டக் கட்டுக்களைத் தளர்த்திக் கொள்வதும் உண்டு. இவ்விதத்தில், ஆசார சாஸ்த்திர முறைகளை முற்றிலும் நடத்தியவர்களாகச் சொல்வதற்கில்லாத ராம கிருஷ்ணர், ரமணர், அரவிந்தர் போன்றோரது அடியார்களுக்கும் ஸ்ரீ மஹா பெரியவாள் உய்நெறி உபதேசித்ததுண்டு. ஆனால் பொதுப்படப் பேசுகையில் இம்மஹாபுருஷர்களின் உயர்வைக் குறிப்பிடுவதுண்டெனினும், அவர்கள் காட்டிய மார்கங்களின் சிறப்பைச் சொல்வதுண்டெனினும், முடிமணியான ஆசாரியரெனில் அது சங்கர பகவத் பாதர்தாம், முடிவான மார்க்கமெனில் அது சங்கரர் புத்துயிர்பெய்தளித்த ஸநாதன தர்மாசாரந்தான் என்றே நாட்டுவார்.
“நானா ஆசைப்பட்டு மனுப்போட்டு இந்த ஆஃபீஸுக்கு வரலை. கொஞ்சங்கூட லாயக்கில்லாதபோது எதுவோ ஒண்ணு பிடிச்சு இழுத்துண்டு வந்து இதிலே ஒக்காத்தி வெச்சிருக்கு. இன்னமும் அதுக்கான ‘லாயக்’ சம்பாதிசேண்டானான்னு கேள்வியாத்தான் இருக்கு! ஆனாலும் நாமா பண்ணிக்காம அதுவா லபிச்ச விஷயம் – அப்படித்தான் ஒரு ஆக்ஞை இருந்து நடத்தி வெச்சிருக்கு – எங்கிறதாலே, ‘நமக்கா சொந்த அபிப்ராயம்னு எதுவும் இருக்கப்படாது; இந்த ஆஃபீஸுக்குன்னு என்ன சட்டதிட்டம் உண்டோ, அந்தப்படிதான் பண்ணனும்’னு தெரிஞ்சுக்கிற அளவுக்கு அந்த ஏதோ ஒண்ணு கண்ணைத் திறந்து விட்டிருக்கு. அதனாலே, முடிஞ்ச மட்டும் அப்படிப் பண்ணிக் கொண்டு போகப் பிரயத்தனம் பண்றேன்” என்று அமரருள் உய்க்கும் அடக்கத்துடன் அவர் கூறியதுண்டு.
ஸ்ரீ மஹா பெரியவாள் ஜகத் குருவாகப் பேசும்போது, நடக்கும் போது, ‘சுயம்’ ‘சொந்தம்’ என்ற எதுவுமேயின்றி சாஸ்திர ஆசாரங்களிலேயே அத்வைதமாக ஐக்கியமாயிருப்பவர். அதனால் தான் அவர் கூறுபவை அவர் வகிக்கும் ‘ஆஃபீஸை’ உத்தேசித்து மட்டும் கூறியதாயில்லாமல் அந்தரங்க ஆழுறுதியுடன் கூறும் மந்திர மொழிகளாக விளங்குகின்றன.
‘ஏதோ ஒன்ணு’ என்று அவர் சொல்லும் பராசக்தி ஜகத்குருவாக அவரை நிறுத்துகையில் சாஸ்திர ரூபமாக அவரது இதயத்தில் நின்று பேச்சுவிக்கிறாள். அவளே அவரைத் தனித்தனி ஜீவர்களுக்குக் குருவாக நிறுத்துகையில் காருண்ய ரூபமாக நின்று, சாஸ்திரக் கட்டை இளக்கியும் பேச்சுவிப்பதுண்டு.


இந்த ஜகத்குரு – ஜீவகுரு பாகுபாட்டிற்கு ஓர் அற்புத உதாரணம் பார்கலாம். அவரைப் பேச்சுவிக்காமல், கடும் மெளனத்திலேயே காருண்யம் காட்டுவித்த உதாரணம்.
1907- இல் பெரியவாள் பீடாதிபத்தியம் ஏற்ற போதிலும் காஞ்சியிலுள்ள ஸ்ரீ மடத்தில் முதல் வியாஸ பூஜை செய்தது 1953- இல்தான். அதனைச் சேர வந்த சாதுர்மாஸ்யத்தின் போதும், அது முடிந்த பிற்பாடுங்கூட, பல மாதங்கள் மெளனம் – அதாவது சிறிய அசைவும் இல்லாமல் கட்டையைப் போல் சமைந்திருப்பார்.
இச்சமயம் பார்த்து பர்மாவைச் சேர்ந்த ஒரு கோடீஸ்வரர் தரிசனத்திற்கு வந்தார். பெளத்த மதத்தில் தீவிர அநுஷ்டானமுள்ள அவருக்கு ஆன்மியமான ஒரு சங்கை. அது பெரியவாளாலேயே தீரும் என்று ஸமிக்ஞை பெற்றுத் தான் காஞ்சிக்கு வந்திருக்கிறார். பெரியவாளானால் கன்ணும் கொட்டாமல், மூச்சு விடுகிறாரா என்று கூடத் தெரியாமல் சிலையாக இருக்கிறார்.
பர்மியர் கூறியதை அவர் காதில் வாங்கிக் கொண்டதாகவே திருக் குறிப்புக் காணோம்.
பர்மியரும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார்.
அந்நாள் ஸ்ரீமட மானேஜர் ஸி.எஸ். விஸ்வநாதையர் வெள்ளை மனத்துடன் சொல்வார். “என்னால் தான் பொறுத்துக் கொள்ள முடியவில்லை! விஷயம் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதில் அந்த பர்மாக்காரன் எத்தனை ஏக்கமும் துக்கமுமாயிருக்கிறானென்று ஒரு பக்கம். இன்னொரு பக்கம், கோடீஸ்வரனாயிருக்கிறானே, வந்த காரியம் அநுகூலமானால் நம்ம கஜானாவை ரொப்பிவிடுவானே; இந்த ‘யஜமான’ரானால் இப்படிப் பண்ணுகிறாரே என்று! எத்தனையோ முட்டிக்கொண்டு பார்த்தேன். ஒன்றும் அந்த காஷ்டத்திடம் பலிக்கவில்லை!”
தவித்து வேண்டிவந்த சந்தேக நிவாரணத்தைப் பெறாமலே பர்மியர் ஊருக்குத் திரும்ப வேண்டிய நேரமும் வந்தது. பெரியவாள் சந்நிதியில் இருந்த அளவும், தம்மை அவர் கவனித்ததாகத் தெரியாவிட்டாலும், அந்த ஸாந்நித்தியமே தமக்கு ஒரு பெரும் சாந்தியூட்டியதாக ஸ்ரீ மடத்தினரிடம் அந்த பர்மியர் கூறிக் கடைசியாக ஒரு தரிசனம் செய்யச் சென்றார் – மடத்தின் கஜானாவையும் ஓரளவு நிரப்பிவிட்டு.
பெரியவாள் நேராக அவரை நோக்கினார். பலகாலமாகப் புறப்பொருள் எதையும் உற்று நோக்காதிருந்த திருநயனங்களில் சூரியனின் ஒளியும் சந்திரனின் குளுமையும் கலந்து நிர்த்தமிட்டன.
பர்மியர் பரவசரானார். அழுதார், சிரித்தார்! ஆடினார், பாடினார்! பலமுறை பணிந்தெழுந்தார்.
சரேலெனப் பெரியவாளை மிகவும் சமீபித்து அவருடைய காதோடு காதாக ஏதோ விம்மி விம்மி கூறினார்.
பல காலமாக நெகிழாதிருந்த திரு அதரங்கள் தாமரை மலர்வதைப் போலத் திருநகை புரிந்தன.
பூமியில் கால் பாவாமலே பர்மியர் ஆனந்தமாக அகன்றார். அவருடைய இதய கஜானா இரம்பிவிட்ட இறும்பூது!
மாதங்கள் கடந்து பெரியவாள் பேச்சுலகுக்குத் திரும்பினார்.
ஸ்வாதீன பக்தர்கள் சிலர், அன்று பர்மியர் அழுது சிரித்து ஆடிப் பாடும்படி என்ன நேர்ந்தது என்று அவர் சொல்லித்தானாக வேண்டுமென்று அடம்பிடித்தனர்.
அவரும் அதற்கு மேல் அடம்பிடித்தார். அது பற்றிச் சொல்வதில்லை என்று!
“அவனுக்கு என்ன ஆச்சுன்னு எனக்கு எப்படித் தெரியும்? அவனையே போய்க் கேட்டுக்கோங்கோ!” என்றார்.
“சரி, பெரியவா காதுலே அவர் என்னமோ சொல்லி, பெரியவா அதை அங்கீகாரம் பண்ணிண்டு சிரிச்சேளே! அதுவாவது என்னன்னு பெரியவ சொல்லலாமே!” என்றார் அவர்களில் ஓர் அதிஸ்வாதீன அடியார்.
“அதுவா?” என்ற பெரிவாள் சட்டென்று விஷயத்தைக் கொட்டிவிட்டார். குறும்பு கொப்பளிக்க: “பொழுது விடிஞ்சா, பொழுது போனா நான் யாரைக் கண்டனம் பண்றேனோ அந்த புத்தரைச் சொல்லி, ‘அவர் நீதான்!’ன்னுட்டு போயிட்டான்!”
சங்கர மடத்தின் ஜகத்குருவாக இருந்துகொண்டு எவரைக் கண்டிக்கிறாரோ அவராகவே தரிசனமும் உள்ளநுபவமும் தருகிறார் ஒரு தனி ஜீவனுக்கு குருவாகும்போது!
இத்தனை பீடிகைக்குப் பிறகு ஸ்வாமி பாபா விஷயத்திற்கு வரலாம். சாஸ்திர தர்ம விதிகளை வெகுவாகச் சிலாகித்தேதான் ஸ்வாமி பேசுகிறார். தம்மிடம் வரும் கடும் ஆச்சாரக்காரர்கள் அக்கடுமையையே தொடரவுங்கூட அவர் ஊக்கியிருக்கும் உதாரணங்கள் உண்டு. ஆனாலும் நடைமுறையில் அவர் செய்வதில் பல சாஸ்திர – ஸம்பிரதாய விதிகளுக்கு மிகவும் மாறாக உள்ளன. எனவே இவற்றின் மெய்க்காவலுக்கே உள்ள பீடத்தின் அதிபரிடமிருந்து என்ன பொதுக்கருத்து எதிர்பார்க்கக்கூடும்?



போதாததற்கு ‘மிராகிள்’ வேறு! அற்புதம் ஆற்றிய ஸித்த புருஷர் சிலரைப் போற்றிப் பெரியவாள் பேசுவதுண்டுதான். ஆனால் ஸ்வாமி பக்தர்களோ அவர் செய்வது ஸித்து வகையைச் சேர்ந்ததல்லவென்றும், அது ஸாக்ஷாத் தெய்வ சக்தியே என்று நம்புகிறோம். அவதாரக் கண்ணன் அற்புதம் செய்தது போலவே இது எனக் கருதுகிறோம். உலகறியக் கடந்த ஐம்பத்திரண்டு ஆண்டுகளாக எவ்வித சமய – யோக அநுஷ்டானமும் இல்லாமல் ஸ்வாமி அற்புதங்களுக்கு மேல் அற்புதமாகப் புரிந்து வருவதால் அவர் தெய்வீக சக்தி பொருந்திய அவதாரம் என்று உறுதி கொண்டிருக்கிறோம். தெய்வமாக் கருணையாகவே தெரியும் அவரது அதிசயப் பிரேமை நம் உறுதியை மேலும் ஆழங்காற்படுத்துகிறது.
ஆனால் ‘கோர்ட்டா’ருக்கு ஆதாரமான சட்டப்புத்தகப்படி அவதாரத்தை நிர்ணயிப்பதென்றாலோ? ஆகம, புராணாதிகளில் அவதாரம் பற்றிக் கூறியிருப்பதில், வைதிக சாஸ்திர ரக்ஷணைக்காகவும், குறிப்பாக வர்ணாசிரமங்களை நிலை நாட்டவுமே அவதாரம் நிகழ்வதாகச் சொல்வதைத்தானே ஸ்ரீமட மரபு பிரமாணமாகக் கொண்டிருக்கிறது? முக்கியமாக சங்கர பகவத் பாதர் இப்படித்தானே அவதார லக்ஷணம் கூறியிருக்கிறார்?
ஆகையால் ஜகத்குரு பெரியவாளிடமிருந்து ஸ்வாமி பற்றி அவரது அடியார்கள் என்ன எதிர்பார்ப்பதற்கிருக்கிறது?
‘அதிருக்கட்டும், ஜகத்குருவாக அவர் ஸ்வாமியின் ஸ்வாமித்துவம் பற்றிப் பொதுக் கருத்து சொல்வதற்கில்லாமலே இருக்கட்டும். ரா.கணபதியின் ஜீவகுருவாக ஏதேனும் தனிக்கருத்துச் சொல்லீருக்கக் கூடுமே, அது என்ன?” என்கிறீர்களா?
இப்படிக் கேட்டால் – ஜீவலோகத்தில் ஒருவருக்குச் சொன்னது மற்றவர்களுக்குப் பொருந்தும் என்று சொல்வதற்கில்லையே!
இதற்கு அழுத்தமான சான்று நேரில் கண்டிருகிறேன். சித்தப்பிரமை பிடித்த ஒரு மத்திம வயதுக்காரரை மந்திராலயம் அழைத்துச் செல்லப் பெரியவாள் ஒரு குடும்பத்தாருக்கு அனுமதி தந்து, பிரஸாதமளித்து, ஆசீர்வதித்து அனுப்பினார். அதே சமயம், அதே கோளாறு கொண்ட தம்பியை உடன் அழைத்துவர முடியாமல், தான் மட்டுமே பெரியவாளிடம் விண்ணப்பித்துக் கொள்வதற்காக வந்திருந்த ஓர் அண்ணன்காரரிடம், “அவாலுக்குச் சொன்னது உனக்கில்லை! நீ அங்கேயெல்லாம் எங்கேயும் தம்பியை அழைச்சுண்டு போகவேண்டாம்!” என்றார். (வேறு பரிஹாரமும் சொல்லாமல், அநுபவித்துத் தீர்க்கட்டும் என்று ‘கோடி காட்டி’ விட்டதாக நினைவு).
ஆக, ஒருவருக்குச் சொன்னதைச் சகலருக்கும் ஆக்குவதற்கில்லையோ என்று தோன்றுகிறது!
இந்தவிளக்கம் அல்லது குழப்பம் ஒருபுறமிருக்க, இந்த விஷயம் பற்றி எழுதுவதற்கு உட்தூண்டுதல் இல்லாமல் மனம் மெளனம் சாதிப்பதுதான் உண்மையான காரணம். என்றேனும் அந்த உட்தூண்டுதல் ஏற்பட்டு எழுத வைத்தாலும் மிக்க மகிழ்ச்சியே!
தற்போது தூண்டுதல் ‘ரிவர்ஸில்’தான் இருக்கிறது. ஸ்வாமிகளைப் பற்றி ஸ்வாமி என்ன சொன்னாரென்று விவரிப்பதில்!
எனக்குத் தெரிந்த அளவில் பெரியவாள் பற்றி ஸ்வாமியின் கருத்தென்னவென்று அறிவதில் மிக்க ஆர்வமாயிருந்தவர் ‘யூனிகெம்’ ஆர். நாகராஜன். அவர் உள்ளுருகிய சாயிக் காதலுக்கும், உயரிய நட்புப் பண்புக்கும் இலக்கியமாயிருந்தவர். ஸ்வாமியிடம் நெருக்கமாக, தாயிடம் குழந்தையாகப் பழகும் பேறு பெற்றவர். ஆயினும் எதனாலோ பெரியவாள் விஷயம் கேட்க முடியாமல் தொண்டையில் ஒரு அடைப்பான் போட்டுவிடுமாம்.

V.K.Kokak with  Bhagavan



மதிப்பிற்குரிய இலக்கிய கர்த்தரும், பின்னாளில் சாயிக்கல்லூரிகள் பல்கலைக் கழக அந்தஸ்திற்கு உயர்த்தப்பட்ட போது அதன் முதல் துணைவேந்தராக இருந்தவருமான ஸ்ரீ வி. கே. கோகக்கிடம் நாகராஜனுக்கு நல்ல பழக்கமுண்டு. எனவே அவரிடம் தம்முடைய ஆர்வ வினாவை தெரிவித்து, அவ்விஷயத்தில் அவருக்கு சம்மதமிருந்தால் அவருடைய வினாவாகவே ஸ்வாமியிடம் சமர்பிக்கக் கோரினார்.
மஹா பெரியவாள் குறித்து ஸ்வாமியின் கருத்தை அறிய கோகக் அதுவரை எண்ணவில்லை. ஆயினும் வேறு சில மஹாபுருஷர்களை அவர்களது அடியார்கள் அவதாரமாகச் சொல்வது பற்றி ஸ்வாமியிடம் கேட்க எண்ணியிருந்தாராம். மஹா பெரியவாளையும் இப்போது அந்த லிஸ்டில் சேர்த்துக் கொள்வதாக நாகராஜனிடம் கூறினார்.
ஸ்வாமியிடம் வினாக்களுக்கு விடை பெறும் வாய்ப்பு கோகாக்குக்கு விரைவிலேயே கிடைத்தது.
ஸ்ரீ ராமகிருஷ்ணரை அவரது திருநாமத்தில் அமைந்த மடத்தினர் இறைவனவதாரமாகவே கூறுவது பற்றி அவர் ஸ்வாமியிடம் கேட்டார்.
“ஏன், இதில் என்ன கேள்வி; அவர் அவதாரந்தான்” என்றார் ஸ்வாமி.
ஸ்வாமியிடம் வருமுன் கோகாக் ஸ்ரீ அரவிந்தர், அன்னை ஆகியோரது அத்யந்த சீடராயிருந்தவர். எனவே சட்டென ஒரு குதூஹலம் ஏற்பட, அவர்களைப் பற்றிக் கேட்டார்.
“அவதார், அவதார்” என்றார் ஸ்வாமி.
“ரமணர்?”
“அவருந்தான்!”
‘காஞ்சீபுரம் ‘எல்டர்’ சங்கராசார்யர்?”
“அவதார்”.
ஸ்வாமியே தொடர்ந்தார்: “ஸகல மார்க்கங்களையும் உத்தரணம் செய்வதற்காக நரரூபத்தில் வருவது ஸமஷ்டி அவதாரம். அதுதவிர, ஒவ்வொரு மார்க்கத்திற்கென அவன் தம்முடைய அம்சத்தால் அப்படி வருவது வ்யஷ்டி அவதாரம். இவ்வாறாக, ராமகிருஷ்ணர் பக்திக்கு; அரவிந்தரும் ‘மதரும்’ யோகத்திற்கு; ரமணர் ஞானத்திற்கு; காஞ்சி சங்கராசார்யர் கர்மாவுக்கு.”
கோகாக்: “முதல் மூன்று புரிகிறது. ஆனால் அத்வைத (ஞான மார்க்க) பீடாதிபதியைக் கர்மாவுக்கு சொல்வது புரியவில்லை”
ஸ்வாமி: “கர்மா என்றால் சாஸ்த்ரீய கர்மாநுஷ்டானம். சங்கர மடங்களின் ஸ்வாமியார்கள் அத்வைத விஷயமாகச் சொல்வது வித்வத் ஸதஸ் போன்றவற்றில் தான். பொது ஜனங்களுக்கென்று வரும்போது அவர்கள் அத்வைதம் சொல்வது ரொம்பக் குறைவு; அங்கே தர்ம சாஸ்திர அநுஷ்டானங்களைத்தான் நிறையச் சொல்வார்கள், அதில் ஸ்வாமிக்கு வருத்தங்கூட” (“Swami said he was not happy about it” என்று கோகாக் கூறியதையே ‘வருத்தம்’ என்று ஆக்கியிருக்கிறது. வேறு பொருத்தமான வார்த்தை தோன்றாத வருத்தத்தோடு! இந்த விளக்கத்திற்குக் காரணம், பிற்பாடு பெரியவாளின் ‘கவலை’ பற்றி ஸ்வாமி கூறப்போவதில் தெரியும்). சாஸ்திர விதிகளின் படியே நடக்கும்படி உபதேசிப்பது சுலபம். ஆனால் நிகழ்காலச் சூழ்நிலையில் அதை நடத்திக்காட்டுவது ஜனங்களுக்குக் கஷ்டம். உபதேசிப்பவர்களுக்கும் மற்றவர்களைவிடக் கடுமையான விதிகள் இருக்கின்றன. அவற்றை அவர்கள் அப்படியே கடைப்பிடிக்கிறார்களா என்று பார்த்தால், பொதுவில் அவர்களும் அசாஸ்த்ரீயமாகத்தான் அநேகம் செய்ய வேண்டியிருப்பதாகத் தெரியும். இந்த விஷயத்தில் குறையே சொல்ல முடியாமல் ஸ்வச்சமான உதாரணமாக இருப்பது (Perfect example) காஞ்சி பெரிய சங்கராசார்யர்தான்”.
இவ்வாறு கூறிய ஸ்வாமிக்கு அந்த ஆச்சாரியருக்கான சாஸ்திரப் பிரமாணங்களின்படி தாம் அவதாரமில்லை என்றும் தெரியாமலா இருக்கும்?உம்
(தனிப்பட்ட சிலருக்கு மட்டும் உயர்வுதர ‘வ்யக்திநாத’னாகவும் உலகினரனைவருக்கும் உயர்வுதர ‘லோகநாத’னாகவும் இறைவன் அவதரிப்பது பற்றியும் கோகாக்கிடம் ஸ்வாமி கூறினாராம்.)
*******
பெரியவாளைக் கர்ம மார்க்க அவதாரமென ஸ்வாமி சொன்னதால் ஞான மூர்த்தமாகக் கருதவில்லை என்று ஆகிவிடுமா? இல்லை. எதிர்பாராத ஒரு ஸந்தர்ப்பத்தில் பெரியவாளை “அத்வைத ஸ்வரூபம்” என்றே ஸ்வாமி சொல்லக் கேட்கும் மஹா பாக்கியம் அடியேனுக்கு கிட்டியிருக்கிறது.
என் தாயும் நானும் புட்டபர்த்திக்குப் புறப்பட்டோம். எங்களுக்குத் தெரிந்த ஒரு பெண்மணி ஸ்வாமிக்கு கடிதம் கொடுப்பதாகச் சொன்னாள். சொந்த விஷயமாகவே தீர்க்கவொண்ணாத இடர்ப்பாடு ஏற்பட்டாலன்றி ஸ்வாமிக்கு கடிதம் கொடுக்கத் தயங்குபவன் நான். பிறருக்காக அப்படிச் செய்வதை அவர் உவப்பாரா என்று அஞ்சவே செய்பவன். எனவே யோசித்தேன். ஆனால் தயாதாட்சிண்யங்களுக்கு ஓர் உருவாயிருந்த என் தாயார் கடிதத்தை வாங்கி வைத்துக் கொண்டாள். “அவளுடைய கஷ்டம் நமக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் இந்த உபகாரங்கூடப் பண்ணாமலிருக்கலாமா?” என்றாள்.
‘அவளுடைய கஷ்டம்’ என்னவென்றால் ஸ்வாமியிடம் அவளுக்குப் பொங்கிய பக்திதான்! இதில் கஷ்டம் என்னவெனில், அவளுடைய கணவருக்கு மஹா பெரியவாள் ஒருவரிடந்தான் நம்பிக்கை, ஈடுபாடு எல்லாம். அவரிருக்கும்போது இன்னொருவரை நினைப்பதே அடாத செயல் என்று மனைவியை ஏசினார். ஸ்வாமி சென்னைக்கு வரும்போது கூட தரிசனத்திற்குப் போகக்கூடாதென்று தடுத்தார். தாபம் தாளாதுதான் தைபெண்மணி ஸ்வாமிக்கு முறையீட்டுக் கடிதம் எழுதியது.
புட்டபர்த்திக்கு அடைந்தோம். ஸ்வாமிக்கே எல்லோர் கஷ்டமும் தெரியும். ஆகையால் நாம் பிறருக்காக அவரிடம் ஒன்று செய்வதை ரசிக்காமலிருக்கலாம். இன்டர்வ்யூ கொடுத்து ஆற அமரப்பேசினாரானால் வேணுமானால் கடிதத்தைக் கொடுக்கலாம். ‘தர்சன்’ லைனில் வேண்டாம்!’ என்று அம்மாவிடம் சொன்னேன்.
“இன்டர்வ்யூ கிடைக்கும். கிடைக்காது! யாருக்குத் தெரியும்? தரிசனத்தின் போதேதான் கொடுத்துப் பார்க்கப் போகிறேன்” என்றால் அவள் விடாப்படியாக.
அப்படியே அன்று மாலை பிரசாந்தி நிலையத்தில் ஸ்வாமி தரிசன ஸஞ்சாரம் செய்துவரும் போது அவள் கடிதத்தை நீட்ட, ஸ்வாமி பேட்டிக்கு அழைத்துவிட்டார்!
அந்தப் பெண்மணி விஷயமாகத்தான் பேட்டியே தொடங்கிக் கடகடவென்று பேசிப் போனார். “அந்தம்மா, பாபம்! ‘ஸ்வாமி’ ‘ஸ்வாமி’ன்னு ஒரே தாபம்! ஹஸ்பென்டா? ‘சங்கராசார், சங்கராசார்ங்கறாரு! சொல்றாரே கண்டா (தவிர) அந்த சங்கராசாரையாவது சரியா புரிஞ்சுகொண்டாரா? அவரு யாரு? அத்வைதம் சொல்ற சங்கராசார் அநேகம் பேரு இருந்திருக்காங்க. இவரு சொல்றது மட்டுமில்லை – அத்வைத ஸ்வரூபம்! இல்லை? அந்த அத்வைதத்திலே (தம்மையே தொட்டுக் காட்டிக் கொண்டு), இதுவும் அத்வைதம் (ஐக்கியம்)னு புரிஞ்சுக்கிற பக்குவம் அந்தம்மா பர்த்தாவுக்கு இல்லை. பரவாயில்லே. ஒரு நாள் புரிஞ்சுப்பாரு. ரெண்டு பேரும் ஸ்வாமிகிட்டே நிறைய வருவாங்க அந்தம்மாகிட்டே சொல்லுங்கோ….”
ஆம், அப்புறம் சிறிது காலத்திலேயே அப்பெண்மணியின் கணவரும் ஸ்வாமியின் பரம பக்தரானார். இருவரும் ஸ்வாமியிடம் அடிக்கடி சென்று ஏராளமான அருள் அறுவடையும் பெறலாயினர்.
எனக்கும் அவர்களால் எப்பேர்பட்ட அறுவடை! ஸ்வாமியின் திருமுகம் பொங்க, கண்கள் மின்ன, “சங்கராசார்…..அத்வைத ஸ்வரூபமே! அந்த அத்வைதத்திலே இதுவும் அத்வைதம்” என்றது இன்றும் கண்முன் தோன்றி, காதில் ரீங்காரமிட்டு, கருத்துக் குருத்தைச் சிலிர்க்க வைக்கிறது!


Sri Kasthuri with His Master



என் ‘ஸ்வாமி’ நூலின் ஆங்கில ஆக்கத்துக்குப் பிரசாந்தி நிலைய சஞ்சிகையின் ஆசிரியரான அறிஞர் – கவிஞர் – அரிய பக்தர் ஸ்ரீ கஸ்தூரி அணிந்துரை அனுப்பி இருந்தார். சாயிராமனின் வாழ்மீகி என்று அவரைச் சொல்லலாம். “சாய்ராம! நீ ஸமானமெவரு?” என்ற கருத்துக் கொண்ட தியாகையர் என்றும் சொல்லலாம். எனவே அவருடைய அனிந்துரையில் பெரியவாளைக் குறிப்பிடுவாரென்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
ஆனால் குறிப்பிட்டிருந்தார். அதுவும் எப்படி? பெரியவாளின்  உயர் பெரும் மாண்பினை உளமாரக் கூறி! “ரிஷிகள் எனும் ஹிமாலயத் தொடர் வரிசைகளுள் எவரையும் விதிர் விதிர்க்கச் செய்யும் உன்னதச் சிகரங்களில் ஒன்றாக மதிக்கப்பெறும் காமகோடி பீட மஹா சங்கராசார்யர்” என்ற அற்புதமான சொற்கோவையில்!
அடுத்த முறை அவரைச் சந்தித்த போது அவ்விஷயமாக அவரைப் போற்றிக் கூறினேன்.
‘பெரியவா, சின்னவா யாரைப் பத்தியும் அபிப்ராயம் சொல்ல நமக்கு என்ன தெரியும்? எல்லாம் ஸ்வாமி அபிப்ராயந்தான்!” என்றார்.

--------------------------------------------------------------------------

பிரசாந்தி நிலையவசியான ஒரு மாது. அவருக்குப் பெரியவாளைத் தரிசிக்க வேண்டுமென்று மிகவும் ஆவல் எழுந்தது. ஸ்வாமியிடம் அப்படிச் சொல்லி அநுமதி கேட்பது தவறோ என்று பயப்படவும் செய்தார்.
சென்னை சென்று குடும்ப விவகாரங்கள் சிலவற்றை முடித்து வருவதாகச் சொல்லி ஸ்வாமியிடம் அநுமதி கேட்டார்.
ஸ்வாமி முமிண் நகையுடன், “காஞ்சிபுரம் போய் சங்கராசார்யாரை நல்லா தரிசனம் பண்ணிக் கொண்டு வா!” என்று சொல்லிக் கை நிறைய பணமும் கொடுத்து அனுப்பி வைத்தார்!

-------------------------------------------------------------------------
புகழ் மிக்க ஒரு தம்பதியர் வெகு காலகாலமாகப் பெரியவாளின் பரம பக்தர்களாக இருப்பவர்கள். பிற்பாடு ஸ்வாமியிடமும் மிக்க பக்தி பூண்டனர். அவர்களிடம் பெரியவாளைப் பற்றி ஸ்வாமி விசாரிப்பதுண்டு. அவர்களுக்குப் பிரச்சனைகள் இருந்த ஒரு சமயம் தபெரியவாள் மிகவும் அக்கறையுடன் அது தீர உபாயங்கள் வகுத்துக் கொடுத்து ரக்ஷித்திருந்தார். இது பற்றித் தம்பதியரில் கணவராயிருப்பவர் ஸ்வாமியிடம் சொல்கையில், உணர்ச்சியெழுச்சியோடு, “எங்களைப் பற்றி பெரியவா அவ்வளவு கவலைப் பட்டிருக்கிறார்! என்றார்.
ஸ்வாமி அவரை இடைமறித்துப் பளிச்சென, “கவலை இல்லை! கருணை!” என்று ஆழ்பொருளோடு ‘எடிட்’ செய்தார். (பெரியவாள் ‘கவலை’ப்பட மாட்டாரெனில் ஸ்வாமியும் ‘வருத்த’ப்பட மாட்டார்தானே?)
என்றேனும் ஒரு காலத்தில் எல்லாப் பணிகளிலிருந்தும் விடுபட்டு ஏகாந்த வாழ்வு மேற்கொள்ள வேண்டும் என்று அம்மனிதர் அவ்வப்போது சொல்வார். அத்யந்தமான இரு நண்பர்களைக் குறிப்பிட்டு அவர்கள் தங்களுக்கு இருக்கை உதவ எப்போதும் சித்தமாக இருப்பதாகவும் கூறுவார்.
ஸ்வாமியிடமும் இவ்விஷயமாக அவர் ஆரம்பித்தார். “எல்லாத்தையும் ஒரு நாள் விட்டுவிட்டு பீஸ்ஃபுல்லாகப் ‘புறப்பட்டுப் போகணும்’னுதான் ஆசை அதுக்கு ரெண்டு இடம் இருக்கு”…
ஸ்வாமி குறிக்கிட்டு சொன்னார். “ஒன்று காஞ்சிப் பெரியவரு; இன்னொண்ணு ஸ்வாமி”.
இதை அந்த பக்தர் நினைவு கூறும்போதெல்லாம், ”நான் ஏதோ லோக மட்டத்திலே ரெண்டு பேரை நெனச்சா ஸ்வாமி ஒரே தூக்காத்தூக்கிட்டார்!” என்பார்.
--------------------------------------------------------------------- 

சில ஆண்டுகளுக்கு முன் எனக்கு கழுத்தில் தாங்க முடியாத ஒரு வலி உபத்ரவித்துக் கொண்டிருந்தது. அது பற்றி ஸ்வாமியிடம் விஞ்ஞாபித்தேன். பரிஹாரம் செய்யாமல், சொல்லக்கூடச் சொல்லாமல், ‘டயக்னோஸிஸ்’ மட்டும் கூறி ஸ்வாமி நிறுத்திவிட்டார். வேண்டுமென்றே தான் அப்படிச் செய்திருக்கவேண்டும்.
ஏனென்றால், பல ஆண்டுகளுக்கு முன் இதே தொந்தரவு எனக்கு உண்டான போது பெரியவாளிடம் நான் முறையிட, அவர் என்ன ‘டயாக்னோஸிஸ்’ கூறினாரோ அதையேதான் இப்போது ஸ்வாமியும் கூறியிருந்தார். அப்போது பெரியவாளும் பரிஹாரம் சொல்லவில்லை. “அதுவே சரியாயிக்கட்டும். நீ அதை ரொம்ப கவனிக்காதே!” என்றுதான் சொல்லியிருந்தார். அப்புறம், அவரது சூக்ஷ்ம அருள் உட்பாய்ந்ததாலேயே இருக்க வேண்டும், சரியாகவும் ஆயிற்று.
ஆனால் சில ஆண்டுகளுக்கு அப்புறம் இப்போது மீண்டும் உபாதை தலையெடுத்திருந்தது. ஸ்வாமியிடம் விண்ணப்பித்தால், அன்று பெரியவாள் சொன்ன டயக்னோஸிஸையே திரும்பச் சொல்லி, அதோடு நிறுத்திக் கொண்டு வேடிக்கை பார்க்கிறார்!
“முன்னே பெரியவாளும் இதையேதான் சொன்னா” என்ற நான், “நிவர்த்திக்கு ஸ்வாமி ஒண்ணும் சொல்லலியே!” என்று வேண்டினேன்.
“அப்போ பெரியவா என்ன சொன்னா?” என்று ஸ்வாமி கேட்டார்.
சொன்னேன்.
ஸ்வாமி திருமுகத்தில் கூடுதலான ஒரு பிரகாசம் திகழ, “அந்தப் பெரியவா சொன்னதையேதான் இந்தப் பெரியவாளும் சொல்றேன்” என்றார்!
அந்த-இந்த என்று வேறு படுத்தாதே என்பது போல, ஒளி நயனங்களில் நயமான குறும்பு மிளிர்ந்தது!
அப்புறம் அந்த உபாதை எப்படி நிரந்தரமாக விலகிற்று என்பது தனிக்கதை.
பிரசாந்தி நிலையத்திலேயே ‘ஸெட்டில்’ ஆகிவிட்டாலென்ன என்று ஒரு சமயம் மிகவும் ஆவலாயிருந்தது. ஆனாலும் ‘தெய்வத்தின் குரல்’ பணியின் நினைவு வந்து அதற்கு அணை போடும். ‘நமக்கே கஷ்டப்பட்டால்தான் புரியும் விதத்தில் இத்தனை கிறுக்கலாகவும், நூதன ‘ஷார்ட்ஹான்ட்’ ஆகவும், அரைகுறை மேற்கோள்கள் கொண்டதாகவும் ஏராளமான விஷயம் பெரியவாளின் உபந்நியாஸங்களிலிருந்தும், அதைவிட அதிகமாக உரையாடல்களிலிருந்தும் சேகரித்து வைத்திருக்கிறோமே! நம்மையன்றி யாரும் இந்தத் தங்கச்சுரங்கத்தை அகழ்ந்து, பெரியவாள் தந்த செல்வத்தை உலகுக்கு உரிமையாக்க முடியாதபடி வைத்திருக்கிறோமே! இதைப் பூர்த்தி செய்யாமல் பர்த்திவாஸத்திற்குப் போவது சரியா? நூலகங்களில் புத்தகங்கள் பார்த்தும், பண்டிதர்களை ஆலோசனை கலந்தும், மற்றும் செய்ய வேண்டியவற்றைச் செய்தும் இக்குறிப்புகளை ரூபம் செய்யச் சென்னைதானே ஏற்ற இடம்? முக்கியமாக, அச்சக வேலையை இங்கே இருந்தால்தானே உடனுக்குடன் முடித்துத்தர முடியும்? என்று யோசிப்பேன். 


அப்போது பர்த்தி செல்ல வாய்த்தது.
ஸ்வாமி அங்கேயே வந்து ஸெட்டில் ஆகும்படியாக அருளாணை பிறப்பித்தார்! நான் விண்ணப்பிக்காமல் அவரே அப்படிக்கூறினார்!
அவர் அழைப்பு விடுத்ததன் அன்புப் பாங்கு! உள்ளம் பொங்கிற்று!
ஆனாலும் பொங்கும் பாலைத் தணிக்க ஊற்றும் நீராகத் ‘தெய்வத்தின் குரல்’ நினைவும் வந்தது. சொல்லலாமா, கூடாதா என்று கூடவே குடைச்சலும்!
அதே வினாடி ஸ்வாமி கேட்டார் “இப்போ என்ன எழுதிக்கொண்டிருக்கிறது?”
அப்……பா என்று ஆசுவாஸ மடைந்தேன். அவரே கேட்டபின் தாராளமாகச் சொல்லலாம்தானே? ‘தெய்வத்தின் குரலில் அப்போது மேற்கொண்டிருந்த பகுதியின் தொகுப்பு வேலை பற்றிக் கூறினேன்.
மடை திறந்தாற்போல அப்போது ஸ்வாமி மணிக்குரலில் கூறிய மணிமொழிகள்!
“ஆதி சங்கரரு எத்தனையோ ஸெஞ்சுரி முன்னாடி இருந்திட்டுப் போயாச்சு. அப்பறம் அவரு பேரு வெச்சுக்கொண்டு எத்தனையோ பேரு வந்தாச்சு. ஆனா அவரு ஹ்ருதயத்தை ஸென்ட் பெர்ஸென்ட் ரிஃப்ளெக்ட் பண்ணிப் பேசறவரு, பண்றவரு காஞ்சி பெரிய சங்கராசார்தான்! அவரு சொல்றது நீ நல்லா ‘ஸிஸ்டம் பண்ணி, செஞ்சுகொண்டு வரே! நீதான் அதைக் ‘கண்டின்யூ’ பண்ண முடியும். நல்லா செஞ்சுப் பூர்த்தி பண்ணு! மெட்ராஸிலே இருந்தாத்தான் அந்தக் கார்யம் நடக்கும்……(என் இதயத்தைத் தொட்டு) இதுதான் ‘ரியல்’ ப்ரசாந்தி நிலயம்; ஸ்வாமி எப்பவும் இதுலே இருக்கறது. ஸ்வாமி(யைப் பற்றிய) ‘புக்ஸ்’, வேறே ‘புக்ஸ்’ நீ எழுதறதையெல்லாம் விட ஸ்வாமிக்கு ப்ரீதி நீ இந்த சங்கராசார் ‘புக்ஸ்’ எழுதறதுதான். ‘ஃப்யூசர்லே ஸநாதன தர்மா என்ன (என்று) ‘ரெஃபர்’ பண்றதுக்கு இதுதான் ‘கெய்டா’ இருக்கப்போறது. நல்லா நடக்கும். ஸ்வாமி க்ருபா பூரணமா இருக்கு.”
ஆஹா! நூறு சதமும் சங்கரராகவே ஸநாதன தர்மத்தை எடுத்தியம்புபவர் பெரியவாள்தானாம்! ஸ்வாமியைக் குறித்த நூல்களையும் விட ஸ்வாமிக்கே உவப்பானது ‘தெய்வத்தின் குர்ல்’ தானாம்!
இதன் பின்னர், கட்டுரைகளாக ரூபம் பண்ணவே இயலாதென்று நான் கழித்துக்கட்டவிருந்த ஏராளமான குறிப்புகளும் ரூபம் பெறுவதற்கு அக்கிருபா சக்தி தோன்றாத்துணை புரிந்து வருகிறது! தொகுப்புப் பணியும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
----------------------------------------------------

நூலைத் தொகுப்பவன் ஓரளவேனும் நூல் வழி நிற்கவேண்டும் என்பதில் ஸ்வாமியின் அக்கறையைப் பாருங்கள்.
என் தாய் மறைந்தபின் மாதந்தோறும் சடங்கு செய்ய வேண்டுமா என யோசித்தேன். அவளுக்காக எத்தனை பிதுர் கடன் செலுத்தினாலும் கடன் தீராதுதான். ஆனாலும் நான் யோசித்ததற்குச் சில காரணங்கள் உண்டு. ஒன்று, அந்தத் தியாகியே தனக்காக எதுவும் செய்ய வேண்டாம்; அப்படிச் செய்வதானால் சிராத்த நாளன்று ஒரு ஏழைப் பெண்மணிக்கு முடிந்ததைக் கொடுத்தால் போதும் என்று சொல்லியிருந்தது. இன்னொன்று, அவள் பிதுர்லோகம், புனர்ஜென்மம் ஆகியவற்றைக் கடந்து பரமாத்மாவிலேயே சேர்ந்திருக்கக் கூடியவள் என்பதில் எனக்கிருந்த திட நம்பிக்கை. எதற்கும் ஸ்வாமியைக் கேட்டு விடலாமென எண்ணினேன்.
புட்டபர்த்தி சென்றேன். பேட்டியும் பெற்றேன். ஸ்வாமி தமது திருவாயாலேயே அம்மா தம்மோடு “மெர்ஜ் ஆயாச்சு” என்று கூறக்கேட்டு உருகி நின்றேன்.
“அப்படியானால் அம்மாவுக்குச் சிரார்த்தாதிகள் செய்ய வேண்டியதில்லைதானே?” என்று கேட்டேன்.
உடனே ஸ்வாமி கூறிய பதில் ஆச்சரியமளிப்பதாக இருந்தது. பிதுர்கடன் தேவைப்படும் பலரது குடும்பத்தாரிடங்கூட, “அப்படிச் சடங்காகத்தான் செய்ய வேண்டுமென்றில்லை. போனவர் நினைவில் நாராயண சேவை (ஏழையருக்கு அன்னம் பாலிப்பு) செய்தாலும் சரியே” என்று ஸ்வாமி கூறி, அவர்கள் அவ்வாறே செய்து வ்ருகிறார்கள். அப்படியிருக்க இப்போது ஸ்வாமி, “அம்மாவுக்கு இதெல்லாம் வேண்டாம்தான். ஆனா லோக ரீதிக்கு வேணும். உங்க ஃபாமிலி’ பத்ததி எப்படி? அதெல்லாம் விட, நீ சங்கராசார் (உபதேசங்கள்) எழுதறே; ஞாபகம் வெச்சுக்கோ! அதனால முடிஞ்ச மட்டும் சாஸ்திர மார்க்கமாவே போ. மத்தவங்க ரொம்ப அசாஸ்திரீயமா பண்றதுலேயும் ‘அஸோஷியேட்’ ஆகாதே! நல்லதை நெனச்சு, சாஸ்திர பூர்வமா ஒண்ணு பண்ணினா அதனால நம்ப அம்மா அப்பா ‘பெனிஃபிட்’ ஆகாவிட்டாலும் எங்கேயாவது, யாராவது கண்டிப்பா ‘பெனிஃபிட்’ ஆவாங்க” என்ற அமர வாசகத்தை கூறினார்.
-------------------------------------------------------------------------

முன்னாள் சாயி பல்கலைக் கழகத் துணைவேந்தருடன் ஸ்வாமிகள் பற்றி ஸ்வாமி கருத்துக்களைத் தொடங்கினோம். இந்நாள் துணைவேந்தருடன் நிறைவு செய்யலாம்.
     1991 யுகாதி சமயம் பர்த்தி சென்ற போது துணைவேந்தர் ஸ்ரீ எஸ். சம்பத்தைச் சந்தித்தேன். அவர் சொன்னார்: “ஸ்வாமி நேற்றைக்குக்கூட பெரியவாளைப் பற்றிச் சொன்னார். பரம உத்தமமான ஸந்நியாஸத்திற்கு இக்காலத்திலும் ஒருவரை காட்டுவதென்றால் அது காஞ்சிபுரம் பெரிய சங்கராசார்யார்தான் என்று சொன்னார்.”
--------------------------------------------------------------------
                                                          
     தனது திவ்விய சக்தியை மறைத்துக் கொண்டு, சாஸ்திரங்களுக்கு முற்றிலும் கட்டுப்பட ஆதரிச மானுடனாகவே வாழ்ந்து காட்டிய ஸ்ரீராமனின் மகிமையை அற்புத சக்தனும், அதிசுதந்திரனுமான கண்ணன் மகிழ்ந்து மொழிவது போல…… ஸத்குரு நாதன் குறித்து சத்ய சாயி நாதன் கூறுவது!



அமரர் திரு ரா. கணபதி